வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (04/10/2018)

கடைசி தொடர்பு:12:45 (04/10/2018)

`கணவரும் குழந்தையும் இறந்தது லக்ஷ்மிக்குத் தெரியாது!' - பரிதவிக்கும் பாலபாஸ்கர் குடும்பம்

கேரள இசையமைப்பாளர் பாலபாஸ்கர் மற்றும் அவரின் மகள் இறந்த விஷயம் மனைவி லக்ஷ்மிக்கு இன்னும் தெரியாது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

பாலபாஸ்கர் லக்‌ஷ்மி

கேரள இசையமைப்பாளரும், வயலின் கலைஞருமான பாலபாஸ்கர் கடந்த மாதம் 25-ம் தேதி தன் குடும்பத்தினருடன் கோயிலுக்குச்சென்று திரும்பும்போது பள்ளிபுரம் அருகே நடந்த கார் விபத்தில் பலத்த காயமடைந்தார். கடந்த ஒரு வாரமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அதே விபத்தின்போது முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலபாஸ்கரின் இரண்டு வயது குழந்தை தேஜஸ்வினி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த பாலபாஸ்கரின் மனைவி லக்ஷ்மி இன்னும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். 

பாலபாஸ்கரின் மறைவுக்குப் பல ஆயிரக்கணக்கானவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரை நல்லடக்கம் செய்யும்போது பாலபாஸ்கருக்கு மிகவும் பிடித்தமான வயலின் கருவியும் அவருடன் சேர்த்து புதைக்கப்பட்டது.  கோர விபத்தில் உயிரிழந்த தன் மகனைப் பார்க்க முடியாமல் பாலபாஸ்கரின் தாய் மற்றும் லக்ஷ்மியின் தாய் கதறி அழுதது சுற்றி இருந்தவர்களின் மனதைக் கனக்கச் செய்துவிட்டது.  இந்த நிலையில், இதையும் தாண்டிய ஒரு செய்தி கேட்போர் மனதை உருகவைப்பதாக உள்ளது. அது, பாலபாஸ்கர் மற்றும் அவரின் குழந்தை தேஜஸ்வினி இறந்த செய்தி அவரின் மனைவி லக்ஷ்மிக்கு இன்னும் தெரியாது. லக்ஷ்மி தொடர் சிகிச்சையில் இருப்பதால் தற்போது இந்த விஷயத்தை அவரிடம் தெரிவிக்க மறுத்துள்ளனர் பாலபாஸ்கரின் உறவினர்கள். 

பாலபாஸ்கர், லக்ஷ்மி இருவரும் கல்லூரிக் காலத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு 16 ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. இதற்காகப் போகாத கோயில் இல்லை... வேண்டாத தெய்வம் இல்லை. இந்த நிலையில், 2016-ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News Credit : manorama