வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (04/10/2018)

கடைசி தொடர்பு:15:15 (04/10/2018)

தேர்வுத்தாளில் சமயக் குறியீடு மூலம் முறைகேடு! - ராஜீவ்காந்தி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி

தேர்வுத்தாளில் சமயச் சின்னங்களையும், பெயர்களையும் குறிப்பிட்டு, முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில் கர்நாடகாவில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவப் பல்கலைக்கழகம் தேர்வுத்தாளில் சமய சின்னங்களையும், பெயர்களையும் குறிப்பிடுவதற்குத் தடை விதித்துள்ளது. 

மருத்துவக் கல்லூரி தேர்வு முறைகேடு

``தேர்வு எழுதுபவர்கள் `ஓம்' என்றும், இதர மதக் குறியீட்டை எழுதியும் தேர்வு எழுத ஆரம்பிக்கின்றனர். ஒரு சிலர், மூன்றாவது, நான்காவது பக்கத்தில் கூட  மதக் குறியீடுகளைப் பயன்படுத்தி தேர்வுத்தாள் திருத்துபவர்களுக்கு அடையாளப்படுத்துகின்றனர். இதன்மூலம், தேர்வுத்தாள் திருத்துபவர்கள் அதிக மதிப்பெண் வழங்கி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுக்க புதிய விதிமுறைகளைக் கொண்டு வர இருக்கிறோம்" என்கிறார்  ராஜீவ்காந்தி மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரமேஷ். 

இவர், ``மாணவர்கள் ஓம் நமோ நாராயணா என்று மூன்றாவது அல்லது நான்காவது பக்கத்தில் எழுதுகின்றனர். இதன்மூலம், தேர்வுத்தாள் திருத்தும் பேராசிரியர்கள் யாருடைய தேர்வுத்தாள் என்பதை அடையாளம் கண்டு, அதிக மதிப்பெண் வழங்குகின்றனர். மேலும், மாணவர்கள் பல்வேறு இடங்களில் தன்னுடைய பதிவு எண்ணை எழுதுவது, அடுத்த பக்கத்துக்குச் செல்ல P.T.O என்று எழுதுவது போன்றவற்றின் மூலம் குறியீடுகளை எழுதி முறைகேட்டில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. மாணவர்கள் தேர்வுத்தாளில் விடைகளைத் தவிர, வேறு எந்தவிதமான குறியீட்டையும் எழுதக்கூடாது என்று அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். 

இனி, மாணவர்கள் தனது தேர்வுத்தாளில் பதிலைத் தவிர தேவையில்லாமல் குறியீடு போன்றவற்றை எழுதினால், தேர்வுத்தாளைத் திருத்தாமல், தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்கு என்று அமைக்கப்பட்ட குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தக் குழு,  மாணவர்களுக்கு அபராதம் விதிக்கவும், தேர்வு எழுதுவதில் இருந்து தடை செய்யவும் பரிந்துரை செய்யலாம்" என்றார். முறைகேடுகளை எப்படியெல்லாம் தடுக்க வேண்டி இருக்கு!