வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (04/10/2018)

கடைசி தொடர்பு:16:06 (04/10/2018)

`பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனங்கள் வசம் சென்றபிறகு, அவற்றின் விலை தொடர்ந்து ஏற்றப்பட்டுவந்தது. குறிப்பாக, தினசரி விலைநிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, புதிய உச்சங்களைத் தொட்டுவந்தது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் எகிறி வருகிறது. விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தெலங்கானா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தன. அதேபோல, மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதுடன், அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்தது.

அருண் ஜெட்லி

இந்த நிலையில், உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெட்லி, ``பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரியை ரூ.1.50 அளவுக்குக் குறைக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதேபோல, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் லிட்டருக்கு 1 ரூபாய் அளவுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 அளவுக்குக் குறையும். மேலும், இதே அளவு விலைக் குறைப்பை அமல்படுத்த மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை மாநில அரசுகள் ஏற்றால், 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.5 குறையும்’’ என்றார்.