வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (04/10/2018)

கடைசி தொடர்பு:17:00 (04/10/2018)

'பா.ஜ.க அரசு பசுக்களை மதிக்கவில்லை!' அமைச்சர் பதவியை தூக்கி எறிந்த கம்ப்யூட்டர் பாபா

'பசுக்களுக்கு உரிய மரியாதை தரவில்லை' என்று கூறி, மத்தியப்பிரதேச மாநில அமைச்சர் பதவியை கம்ப்யூட்டர் பாபா துறந்துள்ளார். 

கம்ப்யூட்டர் பாபா

மத்தியப்பிரதேச மாநிலத்தில், பாரதிய ஜனதா அரசு ஆட்சிசெய்துவருகிறது. ஷிவ்ராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக உள்ளார். மத்தியப் பிரதேசத்தில், அமைச்சர்கள் தவிர 5 சாதுக்களுக்கு அமைச்சர் அந்தஸ்து தரப்பட்டுள்ளது. சாமி நம்தேவ் தியாகி என்பவரும் அதில் ஒருவர். சாதுக்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டருடன் வருவதால், இவருக்கு 'கம்ப்யூட்டர் பாபா' என்ற செல்லப் பெயர் உண்டு. மத்திய இணை அமைச்சர்கள் போல இவர்கள் மத்தியப்பிரதேச மாநிலத்தில் வலம் வந்துகொண்டிருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் அமைச்சர் பதவி பெற்ற கம்ப்யூட்டர் பாபா, தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கம்ப்யூட்டர் பாபா கூறுகையில், ''பசுக்களை மதிக்காத இடத்தில் எனக்கு வேலை இல்லை. மத்தியப்பிரதேச அரசு, பசுக்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. அதேபோல, நர்மதை நதி அருகே சட்டத்துக்குப் புறம்பாகச் சுரங்கம் தோண்டி, கனிமவளங்களைக் கொள்ளை யடிக்கின்றனர். இதுகுறித்து ஷிவ்ராஜ் சிங் சவுகானிடம் பல முறை புகார் அளித்தேன். இந்த அரசும், போலீஸ் துறையும் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நர்மதை நதிக்கரையில் பிறந்தவன் என்று அடிக்கடி ஷிவ்ராஜ் சிங் சவுகான் கூறுவார். அப்படிக் கூறுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஷிவ்ராஜ் சிங் சவுகானின் அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது. அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வெல்வேன் ' என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க