வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (04/10/2018)

கடைசி தொடர்பு:18:40 (04/10/2018)

ஐ.சி.ஐ.சி.ஐ தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் ராஜினாமா!

ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிடும், `உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்' பட்டியலில் சந்தா கோச்சாரும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் இவர்மீது மோசடிக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. வாங்கிய கடனில் ரூ.2,800 கோடிக்கு மேல் கடன் திருப்பிச் செலுத்தப்படாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்திருந்தது தெரியவந்தது. எனவே, வீடியோகான் நிறுவனத்தின் வாராக்கடன் மோசடியில் இவருக்கும் இவரின் கணவருக்கும் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது. 

சந்தா கோச்சார்

இந்தப் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணையில் இறங்கியிருந்தது. வங்கியின் சார்பாகவும் ஒரு விசாரணைக்குழு அமைத்து சந்தா கோச்சாரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது. அந்த விசாரணை முடியும்வரை பதவியிலிருந்து விலகியிருக்கும்படி வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில், இவர் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட வங்கியின் நிர்வாகக்குழு, இவரது பொறுப்புக்கு சந்தீப் பக்‌ஷியை நியமித்துள்ளது.

அடுத்த ஆண்டு, மார்ச் 31வரை சந்தா கோச்சாரின் பதவிக்காலம் இருந்தநிலையில், தற்போது ராஜினாமா செய்துள்ளார். இன்று பொறுப்புக்கு வந்துள்ள சந்தீப் பக்‌ஷியின் பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுக்காலத்துக்குத் தொடரக்கூடும். இந்த ராஜினாமா காரணமாக வீடியோகான் மோசடி குறித்த விசாரணை பாதிக்கப்படாது என்று ஐ.சி.ஐ.சி.ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிடும், 'உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்' பட்டியலில் சந்தா கோச்சாரும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.