வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (04/10/2018)

கடைசி தொடர்பு:18:58 (04/10/2018)

சந்தையில் மீண்டும் கடும் சரிவு! 04-10-2018

முதலீட்டாளர்களின் மனநிலை சர்வதேசச் சந்தைகளில் காணப்பட்ட நெகட்டிவ் காரணிகள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரம் பற்றிய கவலை உள்ளிட்ட பல காரணங்களால், இந்திய பங்குச் சந்தையில் நேற்றைய கடும் சரிவுக்குப்  பின், இன்றும் மிகப் பெரிய சரிவு நிகழ்ந்திருக்கிறது. 

சமீபத்தில், இதுவரை காணாத உச்சம் தொட்ட முக்கியச் சந்தை, கடந்த சில வாரங்களாக அடிக்கடி சரிந்துவரும் நிலையில், ஒரு முடிவில்லா இறக்கத்தை எட்டுவதுபோல வீழ்ந்துகொண்டிருக்கிறது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் இன்று 806.47 புள்ளிகள். அதாவது, 2.24 சதவிகித நஷ்டத்துடன் 35,169.16 என்ற நிலையில் முடிவுற்றது. ஒரு கட்டத்தில், இக்குறியீடு 950 புள்ளிகளுக்கு மேல் சரிந்திருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 259 புள்ளிகள். அதாவது, 2.39 சதவிகிதம் சரிந்து 10,599.25ல் முடிந்தது. இன்றைய சரிவு, சதவிகித அடிப்படையில் காணும்போது, கடந்த எட்டு மாதங்களில் காணப்பட்டதாகும். 

எண்ணெய், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், ஆட்டோமொபைல் மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறை பங்குகள் பெரும்பாலும் மிகவும் விலை சரிந்தன.

கச்சா எண்ணெய் விலை தொடந்து உயர்ந்துவருவதும், அது மேலும் உயரக்கூடிய வாய்ப்பிருப்பதனாலும், சந்தையில் முதலீட்டாளர்களின் மனநிலை மிகவும் வாடியிருப்பது சந்தையின் இறக்கந்துக்கு ஒரு காரணம்.

மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 2.50 குறைந்திருப்பதை அடுத்து, அரசுமயமாக்கப்பட்ட ஆயில் நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டன.

டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.82 எனச் சரிந்ததும் சந்தையின் சரிவுக்கு இன்னொரு முக்கியக் காரணம்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் பங்குகள் முறையே 12.2, 10.9, 10.6 சதவிகிதம் சரிந்தன.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 7 சதவிகிதத்துக்கு மேல் சரிந்தது. எய்ச்சேர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், டாக்டர் ரெட்டி'ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் டெக் மஹிந்திரா பங்குகள் 4 முதல் 6 சதவிகிதம் வரை சரிந்தன.

ஓ.என்.ஜி.சி, சன் பார்மா, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், கெயில் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, இந்தஸ்இந்த் பேங்க் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 3 முதல் 3.75 சதவிகிதம் கீழிறங்கின.

இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், ஐ.டி.சி, பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, JSW ஸ்டீல் மற்றும் டைட்டன் பங்குகள் 2.3 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை சரிந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில், 775 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1889 பங்குகள் விலை சரிந்தும், 138 பங்குகள் முந்தைய தினத்தின் விலையில் மாற்றமில்லாமலும் முடிந்தன.