வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (04/10/2018)

கடைசி தொடர்பு:20:00 (04/10/2018)

உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு - 7 ரோஹிங்யா அகதிகளை மியான்மரிடம் ஒப்படைத்த இந்தியா!

இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்த ரோஹிங்யா இஸ்லாமிய அகதிகள் முதன்முறையாக அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது. 

ரோஹிங்கியா

Photo Credit: ANI

மியான்மர் நாட்டில் சிறுபான்மையினர் மீது நடைபெறும் தொடர் தாக்குதலுக்கு அஞ்சி அந்நாட்டிலிருந்து ஏராளமான ரோஹிங்கா இன மக்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 40,000 ரோஹிங்யா மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் அஸ்ஸாம் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் புகுந்த ரோஹிங்யா இளைஞர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், அந்த 7 பேரையும் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டது.

முகமது இனஸ், முகமது சபீர் அகமது, முகமது ஜமால், முகமது சலாம், முகமது முக்புல் கான், முகமது ரோஹிமுதின், முகமது ஜமால் ஹூசைன் என்று அடையாளம் காணப்பட்ட 7 பேரும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்தும்படி மியான்மர் அரசிடம் இந்தியா கேட்டிருந்தது. அவர்கள் 7 பேரும், மியான்மரைச் சேர்ந்தவர்கள்தான் என்று அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது. அதையடுத்து, அவர்களைத் திருப்பி அனுப்பும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டது. இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையிட்டார். ஆனால், 'இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து இந்திய அரசு, மணிப்பூரிலுள்ள மோரே எல்லையில் வைத்து ரோஹிங்யா அகதிகளை மியான்மர் ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.