வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (04/10/2018)

கடைசி தொடர்பு:21:18 (04/10/2018)

`விலை குறைப்பு எதிரொலி’ - பெட்ரோலிய நிறுவனப் பங்குகளின் விலை தடாலடி சரிவு!

இன்று பிற்பகலில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 1.50 ரூபாய் குறைப்பதாகவும், மேலும் 1 ரூபாயை பெட்ரோலிய நிறுவனங்கள் குறைக்கும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார். அவரது அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், பெட்ரோலிய நிறுவனப் பங்குகளின் விலை தடாலடியாக சரியத் தொடங்கின.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, அந்நிய நேரடி முதலீடு குறைந்துவருவது, அமெரிக்காவின் வர்த்தகப்போர், ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது உட்பட, பல்வேறு காரணங்களால் இந்திய ரூபாயின் வீழ்ச்சி தொடர்கதையாகிவருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தும் போதிய பலன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்துவந்தது. 

பெட்ரோல்

இன்றைய தினம், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 24 பைசா குறைந்தது. எனவே, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.58 என்ற வரலாற்றுச் சரிவைக் கண்டது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சந்தா கோச்சர் ராஜினாமா விவகாரமும் சேர்ந்துகொள்ள, சென்செக்ஸ் 806.47 புள்ளிகள் சரிவடைந்தது. பங்குச் சந்தை வரலாற்றில் இன்றைய தினத்தை மோசமான நாள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே, நேற்றும் 600 புள்ளிகள் வரை சந்தையில் சரிவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று பிற்பகலில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 1.50 ரூபாய் குறைப்பதாகவும், மேலும் 1 ரூபாயை பெட்ரோலிய நிறுவனங்கள் குறைக்கும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார். அவரது அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், பெட்ரோலிய நிறுவனப் பங்குகளின் விலை தடாலடியாக சரியத் தொடங்கின. முன்னணி பெட்ரோலிய நிறுவனங்களான ஹெச்பிசிஎல், பிபிசிஎல், ஐஓசி போன்றவற்றின் பங்குகள், கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு வரலாற்று விலை சரிவைக் கண்டன.