வெளியிடப்பட்ட நேரம்: 22:14 (04/10/2018)

கடைசி தொடர்பு:22:14 (04/10/2018)

`தமிழகத்தின் ஜல்லிக்கட்டு நிலைமை கேரளாவுக்கு வரும்' - பினராயி அரசை எச்சரிக்கும் காங்கிரஸ்!

சபரிமலை விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்ததுபோல் கேரளாவிலும் போராட்டம் வெடிக்கும் என அம்மாநிலக் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சுதாகரன் எச்சரித்துள்ளார்.

கே சுதாகரன்

‘10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வர முடியாது’ என்ற தடை உத்தரவை நீக்கி, ‘அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ எனச் சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தேசம் முழுவதும் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் கேரளா இரண்டுபட்டுக் கிடக்கிறது. தீர்ப்பை அமல்படுத்த ஆளும் கட்சியான மார்க்ஸிஸ்ட் முனைப்பு காட்ட தேவாசம் போர்டு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவுள்ளது. ஆளும் கட்சியில்தான் இந்தக் குழப்பம் என்றால் அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியிலும் இதேநிலைதான். காங்கிரஸின் சில தலைவர்கள் தீர்ப்புக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலாவோ, ``இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கெல்லாம் ஒருபடி மேலாகக் காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவரான கே.சுதாகரன் தெரிவித்த கருத்து அடுத்த ரகம். 

அவர் கூறுகையில், ``கேரளா அரசு இந்த விவகாரத்தில் புத்தி கொண்டு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். நூற்றாண்டுகளுக்கு மேல் பின்பற்றப்படும் வழக்கம் இது. மக்களின் நம்பிக்கையைக் கெடுக்க வேண்டாம். ஐயப்பன் மீது நம்பிக்கையுள்ள பெண்கள் கண்டிப்பாகச் சபரிமலைக்கு வரமாட்டார்கள். ஜல்லிக்கட்டு விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டியது. கடைசியில் என்ன நடந்தது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கைமீறி போனதுடன் போராட்டம் வெடித்தது. பின்னர் சுதாரித்துக்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. சபரிமலை விஷயத்திலும் அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த நினைத்தால் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல் கேரளாவிலும் போராட்டம் வெடிக்கும். நிலைமை கைமீறிப்போகும். எல்லாம் தெரிந்துதான் அரசாங்கம் மறுசீராய்வு செய்யப்போகிறதா?" எனக் எச்சரித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க