வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (05/10/2018)

கடைசி தொடர்பு:07:20 (05/10/2018)

எல்.இ.டி டிவிக்களை தயாரிக்க ஆந்திராவில் புதிய தொழிற்சாலையை தொடங்கியது ஷியோமி

ஷியோமி நிறுவனம் அதன் எல்.இ.டி டி.வி-க்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது.

ஷியோமி

ஷியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து வேறு சில வீட்டு உபயோகப் பொருள்களையும் விற்பனை செய்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கது எல்.இ.டி டிவி-க்கள். இந்த வருடத்தின் தொடக்கத்தில் மூன்று எல்.இ.டி டிவி-க்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அந்த டிவி-க்கள் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. பிறகு கடந்த மாதத்தில் அந்த டிவி-க்களின் அடுத்த வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருந்தது. தொடக்கத்தில் ஸ்மார்ட்போன்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. கடந்த வருடம் முதல் 'மேக் இன் இந்தியா ' திட்டத்தின் கீழ் இங்கேயே தயாரிக்கத் தொடங்கியது. தற்பொழுது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஷியோமி ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டதுதான்.

டிவி

அதைத் தொடர்ந்து தற்பொழுது எல்.இ.டி டிவி-க்களையும் இந்தியாவில் தயாரிக்க ஷியோமி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக புதிய தொழிற்சாலை ஒன்றை Dixon Technologies என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆந்திர பிரதேச மாநிலத்தில் நிறுவியிருக்கிறது. திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலையை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்திருக்கிறார். 32 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டிவி தொழிற்சாலையில் 850 பேர் பணிபுரிய முடியும். இதன் மூலமாக மாதத்துக்கு ஒரு லட்சம் Mi LED TV-களை அடுத்த வருடக் காலாண்டில் உற்பத்தி செய்ய முடியும் என ஷியோமி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.