வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (05/10/2018)

கடைசி தொடர்பு:09:40 (05/10/2018)

``புதுவை ரேசன் கடைகளுக்கு புழுங்கல் அரிசி தேவை..!'' பாஸ்வானை சந்தித்த நாராயணசாமி

நாராயணசாமி பாஸ்வான்

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். 'புதுச்சேரியில் கடந்த இரு ஆண்டுகளாக வறட்சி நிலவும் மற்றும் பயனாளிகளுக்கு வேறு சில காரணங்களால் நேரடிப் பணப்பரிமாற்றத் திட்டத்தைவிட பொது விநியோகத் திட்டம் உகந்ததாக இருக்கும்' என்று அப்போது அவர் கூறினார். விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யவும் அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். புதுச்சேரி விவசாயிகளிடமிருந்து 80,000 டன் நெல் கொள்முதல் செய்வதன் மூலம் 48,000 டன் அரிசி பெற முடியும் என்ற காரணத்தினால், நாராயணசாமி இதற்கான அனுமதியை வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார். புதுச்சேரிக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, 45,000 டன் அரிசி தேவையாகும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம், புழுங்கல் அரிசி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி முதலமைச்சரின் கோரிக்கைகளுக்கு முதல் நிலை ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சர் பாஸ்வான், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பொருள்களை நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொது விநியோகக் கடைகளைப் (பி.டி.எஸ்) பயனாளிகளுக்கு ஏற்ற வகையில் அமைத்து, அந்தக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் அரிசியை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள், பி.டி.எஸ் கடைகள் சரியாக செயல்படுவதை உறுதி செய்ய தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் முறைகேடுகளை உடனடியாக கவனத்துக்கு கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த நடவடிக்கையின் மூலம் பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லைக் கொண்டு செல்வதற்கான  செலவு குறைவதுடன், உள்ளூர் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதும் உறுதி செய்யப்படும். இது தொடர்பான விரிவான திட்ட ஆலோசனைகள் அமைச்சகத்திடம் 15 நாள்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானிடம் உறுதியளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க