வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:10:00 (05/10/2018)

‘1.95 லட்சம் துண்டுகள்; 81,736 பெட்ஷீட்கள்; 5,000 தலையணைகள்’ - ரயில் பயணிகளின் கைவரிசை

மேற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்படும் தொலைதூர ரயில்களில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 1.95 லட்சம் துண்டுகள், 81,736 பெட்ஷீட்கள், 5,038 தலையணைகள்  காணாமல் போனதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள்

இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு மக்களின் சாய்ஸ் ரயிலாகத்தான் இருக்கும். ஏனெனில் தொலைதூர ரயில்களில் படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் இருக்கும். வயதானவர்களுக்கு ரயில் பயணம் சௌகரியமாக இருக்கும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய ரயில்வே நிர்வாகம் முடிந்தவரை தங்களால் இயன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றனர். இருப்பினும் பயணங்களின்போது நாம் அதில் ஏதாவது ஒரு குறை சொல்வது உண்டு. 

இந்த நிலையில் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள ஒரு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படும் தொலைதூர ரயில்களில் பயணிகளின் உபயோகத்துக்காக வைக்கப்பட்டிருந்த 1.95 லட்சம் துண்டுகள், 81,736 பெட்ஷீட்கள், 55,573 தலையணை உறைகள், 5,038 தலையணைகள், தண்ணீர் டேப்புகள், கழிவறையில் இருக்கும் கம்பிகள், மக்குகள், ஷவர் கீரில் போன்ற ஏராளமான பொருள்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் , ஜன்னல் கம்பிகள், ரயில்வே தண்டவாளங்கள் உள்ளிட்ட சுமார் 2.97 கோடி மதிப்பிலான பொருள்கள், ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுமார் 79,350 கைக்குட்டைகள், 27545 பெட்ஷீட்கள், 21,050 தலையணை உறைகள் திருடப்பட்டுள்ளதாகவும் இதன் மதிப்பு மட்டும் 62 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.