வெளியிடப்பட்ட நேரம்: 10:34 (05/10/2018)

கடைசி தொடர்பு:10:56 (05/10/2018)

3 மாநிலத் தேர்தல்: காங்கிரஸுடன் மாயாவதி கூட்டணி வைக்காதது ஏன்?

மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 3 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இதன் பின்னணி என்ன?

3 மாநிலத் தேர்தல்: காங்கிரஸுடன் மாயாவதி கூட்டணி வைக்காதது ஏன்?

``ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை" என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், இந்த மாநிலங்களில் தமது கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்தாண்டு மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 

இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன், மாயாவதி தலைமைலான பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏதுவாக, மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மாயாவதி சந்தித்துப் பேசினார்.

இதனால், காங்கிரஸ் கட்சியுடன் மாயாவதி கூட்டணி வைப்பது உறுதி என்று கருதப்பட்ட நிலையில், திடீரென்று, ``காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை; மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டியிடும்" என்று அறிவித்துள்ளார் மாயாவதி. இது, காங்கிரஸ் வட்டாரத்தில் சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஒன்று திரண்டு போட்டியிடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாயாவதியின் இந்த அறிவிப்பு, தேசிய அரசியலில் திடீர் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மாயாவதி - பகுஜன் சமாஜ்

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, உத்தரப்பிரதேசத்தில் தங்கள் கட்சியின் பரம எதிரியான சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடலாம் என்று மாயாவதி முடிவெடுத்துள்ளார். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி வைத்தால், மாநிலக் கட்சிகளின் செல்வாக்குக் குறைந்துவிடும் என அவர் கருதுவதாலேயே இந்த முடிவை மாயாவதி எடுத்திருப்பதாகக் கருத்து தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 3 மாநில சட்டசபைத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பெரிய அளவில் வாக்குவங்கி இல்லாத நிலையிலும், தனித்துப் போட்டியிட்டு கட்சியின் செல்வாக்கை உயர்த்தலாம் என்று அவர் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஒரேதரப்பு வாக்காளர்களே உள்ளனர் என்று கருதப்படுவதால், இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்தாலும், பெரிய அளவில் வாக்குகளை தங்கள் பக்கம் இழுத்துவிட முடியாது என்று கருதியே மாயாவதி, தனித்துப் போட்டியிட முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சிறுபான்மையினர் வாக்குகளைப் பொறுத்தவரை, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளை விடவும் சமாஜ்வாதிக்கு அதிக சதவிகிதம் இருக்கும் என்பதால், இந்த முடிவை மாயாவதி எடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

மத்தியப் பிரதேசத்திலும், சட்டீஸ்கரிலும் மாயாவதியுடன் கூட்டணி வைப்பதை அந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் விரும்பிய போதிலும், ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. 

இதனிடையே, மத்திய அரசின் நெருக்குதல் காரணமாகவே, காங்கிரஸ் கட்சியுடன் மாயாவதி கூட்டணி வைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக் விஜய்சிங் கூறிய கருத்துக்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் 2013-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6.3 சதவிகித வாக்குகள் கிடைத்தன. 4 இடங்களில் அப்போது வெற்றியும் கிடைத்தது. அங்கு குறிப்பிட்ட விகிதத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

மத்தியப்பிரதேசத்தில் போட்டியிடும் 22 வேட்பாளர்களின் பெயர்களைத் தன்னிச்சையாக மாயாவதி அறிவித்ததைக் காங்கிரஸ் கட்சியின் மத்தியப்பிரதேச தலைவர் கமல்நாத் ஏற்கவில்லை. இதேபோல சட்டீஸ்கர் மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர் என்பதால், அவர்களின் வாக்கு வங்கியை தங்கள் கட்சியின் பக்கம் இழுக்கலாம் என்பது மாயாவதியின் கணக்கு. ஆனால், அவரின் இந்தத் திட்டம், உத்தரப்பிரதேசத்துக்கு வெளியே எடுபடுமா என்பது சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும்.

எப்படி இருப்பினும், மத்தியப் பிரதேசம் உட்பட 3 மாநிலத் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க