வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (05/10/2018)

கடைசி தொடர்பு:15:45 (05/10/2018)

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஆட்டோ! - நெகிழவைத்த கேரள நண்பர்கள்

கேரளாவில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நண்பனுக்கு ஆட்டோ வாங்கிக்கொடுத்து உதவியுள்ளனர், அவரது பழைய நண்பர்கள்.

நண்பர்கள்

photo credit:@mathrubhumieng

கேரள மாநிலம் கொல்லத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் ரவீந்திரன்.  சமீபத்தில் ஏற்பட்ட கேரள பேரிடரில் தனது வீட்டை இழந்துவிட்டார். மேலும், வெள்ளத்தால் தொழிலும் நலிவடைந்துவிட்டதால், பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டார். இதைக் கேள்விப்பட்ட அவரது பள்ளி நண்பர்கள், அவருக்கு உதவிசெய்துள்ளனர்.

1991 - 92 காலகட்டத்தில் ,குமுளியில் உள்ள அரசுப் பள்ளியில் தங்கி எஸ்.எஸ்.எல்.சி படித்தவர் ரவீந்திரன். இந்தப் பள்ளியில் பழைய மாணவர்களுக்கான அமைப்பு ஒன்று உள்ளது. இந்த அமைப்பின்மூலம் ஆண்டுதோறும் பழைய மாணவர்கள் சந்திப்பு மற்றும் சில பொதுக் காரியங்களுக்கும் உதவிவருகின்றனர். அந்தவகையில், ரவீந்திரனின் நிலையைக் கேள்விப்பட்டு உதவ முன்வந்தனர். இதையடுத்து, பழைய மாணவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்த அவர்கள், ரவீந்திரனுக்கும் அழைப்புவிடுத்தனர். 

அந்த சந்திப்பில், ஆட்டோ ரிக்சா ஒன்றை ரவீந்திரனுக்குப் பரிசளித்துள்ளனர். இதேபோல, மற்றொரு நண்பரின் மகளுக்கு நோய் பாதிப்பு இருப்பதை அறிந்து, அவருக்கும் பண உதவி செய்துள்ளனர். ` இது, என்னுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க உதவியாக இருக்கும்' என நண்பர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார் ரவீந்திரன். இந்தச் செய்தி வைரலாகவே, ` வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதேபோல நாமும் உதவ வேண்டும்' என வலைதளங்களில் கோரிக்கை விடுத்துவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க