வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:16:30 (05/10/2018)

இடுக்கி உள்பட 11 அணைகள் மீண்டும் திறப்பு! - ரெட் அலர்ட்டால் உஷாரான கேரளா

கேரளாவில் மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இடுக்கி உள்பட 11 அணைகள் இன்று மாலை திறக்கப்பட உள்ளன. 

இடுக்கி

கேரள மாநிலத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக, மாநிலம் முழுவதும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அதிகப்படியான நீர்வரத்து காரணமாக, அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பித் திறக்கப்பட்டதால், கடும் பாதிப்புக்கு ஆளானது கேரளா. பிறகு, கேரளாவை மீட்டெடுக்க உலகம் முழுவதிலும் இருந்து நிதியுதவிகள் குவிந்தன. தற்போது, வெள்ளப் பாதிப்பிலிருந்து மெள்ள மெள்ள கேரளா மீண்டுவரும்நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை இருக்கும் எனப் பேரிடர் மேலாண்மை இயக்குநகரம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையடுத்து, கேரளாவில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று மலை 4 மணிக்கு கேரளாவின் மிகப் பெரிய அணையான இடுக்கி அணையின் ஷட்டர்கள் 40 செ.மீ அளவு திறக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக இன்று நடந்த கூட்டத்தில், இடுக்கி மாவட்ட ஆட்சியர் எம்.பி ஜார்ஜ், இடுக்கி எம்.எல்.ஏ மற்றும் கேரள மாநில மின்சார வாரியத்தின் பாதுகாப்புப் பிரிவு நிர்வாகி ஆகியோர் கலந்துகொண்டனர். 

 கேரளாவில் உள்ள திருச்சூர் சிம்னி அணை, தேன்மலா அணை, அருவிக்கரை மற்றும் நெய்யாறு அணை ஆகியவை ஏற்கெனவே திறக்கப்பட்டுவிட்டன. தேன்மலா அணையின் மூன்று ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகலில் கக்கி, அனதோடி, பம்பா, மூழியார், பனாசுரா, கக்கயம் ஆகிய அணைகள் திறக்கப்பட உள்ளன. பம்பா அணையின் மறுசீரமைப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணியிலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மற்ற மாநிலத்தவர்கள் கேரளாவில் சுற்றுலா மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், `இடுக்கி அணைக்கு அருகில் உள்ளவர்கள், இரவு நேரங்களில் அணைக்கு அருகில் செல்ல வேண்டாம்' எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.