`ஆதாரில் உள்ள தவறான தகவல் தற்கொலை வரை கொண்டுசென்றுள்ளது!’ - ஒடிசா அரசு ஊழியர் கண்ணீர் | Frustrated over EPF withdrawal, Odisha man threatens to commit suicide

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (05/10/2018)

கடைசி தொடர்பு:16:20 (05/10/2018)

`ஆதாரில் உள்ள தவறான தகவல் தற்கொலை வரை கொண்டுசென்றுள்ளது!’ - ஒடிசா அரசு ஊழியர் கண்ணீர்

ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ள தவறான தகவலால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, ஒடிசா மாநில அரசு ஊழியர் ஒருவர் கண்ணீர்மல்க புகார் கூறியிருக்கிறார். 

ஒடிசா அரசு ஊழியர் சந்தோஷ் ஜெனா

Photo Credit: ANI

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரிபாடா பகுதியைச் சேர்ந்தவர், சந்தோஷ் ஜெனா. இவர், அப்பகுதியில் உள்ள மின்சாரவாரிய அலுவலகத்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். ஆதார் அட்டையில்,  அவரின் பிறந்தநாள் தவறாக இடம்பெற்றிருப்பதால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருக்கும் பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. 

இதுகுறித்துப் பேசிய ஜெனா, ``எனது ஊதியம் மிகவும் குறைவு. தற்போதுள்ள சூழலில் எனது மகளின் திருமணத்தை நடத்த முடியவில்லை. எனது மகனின் கல்விச் செலவுக்கு போதிய பணத்தைச் செலவழிக்க முடியவில்லை. இதனால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து, எனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நினைத்தேன். ஆனால், எனது ஆதார் அடையாள அட்டையில் பிறந்த தேதி தவறாகப் பதிவாகியுள்ளதால், அந்த நிதியை எடுக்க முடியவில்லை. 

கடந்த ஓராண்டு காலமாக பொருளாதாரரீதியாக எனது குடும்பம் மிகவும் கஷ்டமான நிலையை எதிர்க்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், அரசு மற்றும் மயூர்கஞ்ச் மாவட்ட நிர்வாகம் ஆகியவை எனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்ளுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’’ என்று கண்ணீர்மல்க தெரிவித்தார். 

ஆதார் அட்டையில் பிறந்தநாள் உள்ளிட்ட தகவல்கள் தவறாக இடம்பெற்றிருக்கும்பட்சத்தில், அதை மாற்றுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, பிறந்தநாள் குறித்த தகவல் ஒருமுறைக்கு மேல் மாற்றப்பட வேண்டுமானால், அப்பகுதியில் உள்ள தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தின் ரீஜனல் ஆபீஸர் (RO), குறிப்பிட்ட நபரின் வீட்டுக்குச் சென்று சரிபார்க்க வேண்டும். ஜெனா விவகாரத்தைப் பொறுத்தவரை, தனது பிறந்தநாள் தகவலை மாற்றக் கோரி பல்வேறு துறையில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.