வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:18:00 (05/10/2018)

இந்திய விமானப் பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு..! இனி, முகம்தான் உங்கள் நுழைவுச்சீட்டு

விமான நிலையங்களில் வரும் காலங்களில் பயணிகளின் முகத்தை தன்னிச்சையாக அடையாளம் காணும் தொழில்நுட்பத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். 

விமான நிலையம்

உலகம் முழுவதும் தன்னிச்சையாக முகத்தை அடையாளம் (facial recognation) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் டிஜி யாத்ரா (digi yatra) திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டம் குறித்துப் பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு, 'இந்த முன்னெடுப்பு, தொலை நோக்குப் பார்வை மற்றும் எதிர்காலத்தை நோக்கிய திட்டமிடலுடன் இருக்கும். இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும். இந்தத் திட்டத்தில் யாருடைய ப்ரைவசியிலும் யாரும் தலையிட முடியாது' என்று தெரிவித்தார். டிஜி யாத்ரா என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் காகிதமற்ற பயணத்தை அளிப்பதற்கான முன்னெடுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் விமான நிலையத்துக்குள் நுழைவதற்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான டிஜிட்டல் நடைமுறை பின்பற்றப்படும்.

இந்த டிஜி யாத்ரா (Digi yatra) திட்டம் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களில் செயல்படுத்தப்படும். கொல்கத்தா, வாரணாசி, புனே, விஜயவாடா விமான நிலையங்களில் ஏப்ரல் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜி யாத்ரா திட்டத்தில் பயணிகளுக்கான மையப்படுத்தப்பட்ட பதிவு முறை திட்டம் (centralised registration system) அறிமுகப்படுத்தப்படும். அதன் மூலம் ஒவ்வொரு பயணிக்கும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும். பயணத்துக்கு முன்னதாக, விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் பயணிகளின் விவரங்கள் மற்றும் அடையாள எண்ணை, பயணிகள் செல்ல வேண்டிய விமான நிலையத்துக்கு அளிக்கும். பொதுமக்கள், பெயர், இ-மெயில் ஐடி, மொபைல் எண், ஏதேனும் அடையாள அட்டையின் விவரம், மற்றும் ஆதார் எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.