வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (05/10/2018)

கடைசி தொடர்பு:20:40 (05/10/2018)

பா.ஜ.க-வை வீழ்த்துவதுதான் முதல்பணி; பிரதமர் இலக்கு அடுத்ததுதான்! ராகுல் காந்தி உறுதி

நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே எங்களுடைய முதல் பணி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி

புதுடெல்லியில் நடைபெறும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கான்கிளேவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், `பல ஆண்டுகளாகக் கோயில்கள், மசூதிகள் உள்ளிட்டவற்றுக்கு நான் சென்றுவருகின்றேன். ஆனால், திடீரென்று நான் கோயிலுக்குச் செல்லும் விவகாரம் பெரிதுபடுத்தப்படுகின்றன. நான் கோயிலுக்குச் செல்வதை பா.ஜ.க விரும்பவில்லை என்று நினைக்கிறேன். அது அவர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. தாங்கள், மட்டும்தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று பா.ஜ.க-வினர் நினைக்கிறார்கள். நான் விமர்சனங்களைக் கேட்கிறேன். விமர்சனங்களைக் கவனிப்பது என்னுடைய கடமை. தலைமைத்துவம் என்பது பரிணாம வளர்ச்சியடையும் தன்மை கொண்டது.

அது கற்றுக்கொள்வதை வைத்து தொடர்ச்சியாக மாறக்கூடியது. நான், நேரடியாகச் சென்று மக்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏன், பிரதமர் மோடி அதைச் செய்வதில்லை. நான் என்னுடைய அம்மாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். நான் பொறுமையாக இருப்பதற்கு நிறைய கற்றுக்கொடுத்தார். நான், பொறுமையற்றவனாக இருப்பேன். எப்படி பொறுமையாக இருக்க வேண்டும் என்று அவர் எனக்கு விளக்குவார். சில நேரங்களில், நான் அவரைக் குறிப்பிட்டுச் சொல்வேன், அவர் ரொம்ப பொறுமையாக இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜ.க-வை தோற்கடிப்பதுதான் எங்களுடைய முதல் பணி. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, யார் பிரதமர் என்பதை முடிவு செய்துகொள்ளலாம். கூட்டணிக் கட்சிகள் விரும்பினால், நான் பிரதமராகத் தயார்' என்று தெரிவித்தார்.