வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (06/10/2018)

கடைசி தொடர்பு:07:22 (06/10/2018)

மீனவர்களைக் கௌரவித்த கேரளா பிளாஸ்டர்ஸ்; நெகிழ்ச்சியால் நிரம்பிய மைதானம் #KERMUM#KeralaFlood

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ஒட்டுமொத்த மாநிலமும் பெரும் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டது. தற்போது அந்தப் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகிறது. இந்த நிலையில், கால்பந்து திருவிழாவான ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் 5-வது சீசன் கடந்த செப்டம்பர் 29 -ம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று  கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மும்பை சிட்டி அணியை எதிர்கொண்டு விளையாடியது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணீயில் வீரர்

நேற்று கேரள அணி தனது இரண்டாவது போட்டியில் மும்பை அணியைச் சொந்த மண்ணில் (கொச்சி) எதிர்கொண்டது. கேரள மாநிலம் கால்பந்து விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட மாநிலம். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கப் பாடுபட்ட மீனவர்களையும் மீட்புப்பணி வீரர்களையும் கௌரவிக்கும் பொருட்டு, கேரள அணியின் ஜெர்சியில் சிறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அவர்களது மஞ்சள் ஜெர்சியில் படகில் மீனவர் ஒருவர் நிற்பது போலும், ஹெலிகாப்டரில் மீட்புப்பணிகள் நடைபெறுவதும் போலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் போட்டி தொடங்கும் முன்பாக மீட்புப்பணியில் ஈடுபட்ட மீனவர்கள் மைதானத்துக்கு அழைக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர். இந்தப்போட்டியைக் காண அந்த அணியின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் மோகன்லால் வந்திருந்தார். 

மஞ்சப்படை ரசிகர்கள்

நீண்ட நாளுக்குப் பிறகு கேரள மண்ணில் நடைபெற்ற கொண்டாட்டம் என்பதால் மைதானம் நிரம்பி வழிந்தது. போட்டியைக் காண வந்த ரசிகர்களும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கப் போராடிய அனைத்து மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக பல்வேறு வாசகங்கள் நிரம்பிய பதாகைகள் கொண்டு வந்திருந்தனர். கேரள கால்பந்து அணியின்  `மஞ்சப்படை’ ரசிகர் பட்டாளமும் பெரிய அளவில் பேனர் ஒன்றை மைதானத்தில் காட்டி பரவசமடையச் செய்தது. அதில் பல்வேறு மக்களும், மீட்புப்படை வீரர்களும் மழை நேரத்தில் மாநிலத்தைத் தூக்கிப் பிடித்ததுபோல் ஒரு கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது. இப்படி மைதானம் முழுவதும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் இறங்கிய  ஹீரோக்களுக்கு அளிக்கப்பட்ட பாராட்டுகளுக்கும் நன்றிகளுக்கும் நடுவில் போட்டி நடைபெற்றது. 

போட்டியின் 24 -வது நிமிடத்தில் கேரள அணி முதல் கோல் அடுத்தது. அதன் பின்னர் இரு அணிகளும் கடுமையாக முயன்றும் எளிதாகக் கோல் அடிக்க முடியவில்லை. போட்டியை வென்று விட்டோம் என்று கேரளா நினைக்கும் வேளையில், கூடுதல் நேரத்தில் மும்பை சிட்டி அணி கோல் அடித்தது. இதன் மூலம் ஆட்டம் 1-1 என்று சமனில் முடிந்தது.