வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (06/10/2018)

கடைசி தொடர்பு:11:29 (06/10/2018)

`பலமுறை எடுக்கச் சொன்னோம்; எடுக்கல!' - 4 பேரின் உயிரைப் பறித்த ரயில்வே விளம்பரப் பலகை

புனே நகரில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை விழுந்ததில் 4 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர்.

விளம்பரப்பலகை

ரயில்வே சார்பாக புனே நகரில் சாலையோரத்தில் பிரமாண்டமான விளம்பரப்பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. விளம்பரப் பலகை வைக்க முறையான அனுமதி வாங்கவில்லை. ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில்தான் விளம்பரப்பலகை வைக்கப்பட்டிருந்தது. நேற்று சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது விளம்பரப் பலகை விழுந்தது. 4 ஆட்டோக்களும் இருசக்கர வாகனங்களும் உள்ளே மாட்டிக் கொண்டன. சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக பலியானார்கள். விளம்பரப் பலகைக்கு அடியில் சிக்கி காயமடைந்து கிடந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

விபத்து குறித்து புனே நகர போக்குவரத்து துறை இணை கமிஷனர் தேஜஸ்வி கூறுகையில், ``இப்படி ஒரு விளம்பரப்பலகை வைப்பது குறித்து ரயில்வே நிர்வாகம் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. விபத்து நடந்த பின்னரே எனக்குத் தெரியவந்தது'' என்கிறார். 

புனே நகர மேயர் முக்தா திலக் ரயில்வே நிர்வாகம் மாநகராட்சி விதிமுறைகளை மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டுகிறார். ``விபத்து நடந்த இடத்தில் 20 அடி உயர பேனர்கள் வைக்கவே அனுமதி உண்டு. ஆனால், 40 அடி உயர விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அனுமதி வாங்காமல் விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டாமென்று ரயில்வே நிர்வாகத்துக்கு பலமுறை அறிவுறுத்தியும் பயனில்லை'' என்றும் அவர் கூறியுள்ளார். 

விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் இழப்பீடாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க