வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (06/10/2018)

கடைசி தொடர்பு:12:08 (06/10/2018)

அரசுப் பேருந்தை ஓட்டிய குரங்கு... வழிகாட்டிய டிரைவர்... கர்நாடகாவில் நடந்த அவலம்

கர்நாடக மாநிலத்தில் அரசுப் பேருந்தின் ஸ்டீயரிங்கில் குரங்கை வைத்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

குரங்கு


கர்நாடக அரசுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் தேவநாகிரி - பாரமஸ்சகாரா இடையே பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று பிரகாஷ் என்ற ஓட்டுநர் அந்த ரூட்டில் பேருந்தை இயக்கியுள்ளார். இந்தப் பேருந்தில் வழக்கமாக ஒரு குரங்காட்டியும் அவரது குரங்கும் பயணம் மேற்கொள்ளும். பேருந்தில் குரங்கு ஏறியவுடன் நேரிடையாக ஸ்டீயரிங்கில் அமர்ந்துகொண்டு இறங்க மறுத்து அட்டகாசம் செய்துள்ளது. விலங்குகள் மீது பிரியம் கொண்ட ஓட்டுநர் குரங்கை விரட்டாமல் பேருந்தை இயக்கியுள்ளார். இதைப் பேருந்தில் பயணம் செய்த சக பயணி செல்போனில் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதை அடுத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்துக்கழகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், `` குரங்கு பேருந்தின் மீது அமர்ந்திருக்கும் வீடியோ வைரலானதையடுத்து அன்று பணியில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்” என்றார். 

இதுதொடர்பாக தேவநாகிரி போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கடந்த ஆக்டோபர் 1-ம் தேதி தேவநாகிரி - பாரமஸ்சகாரா இடையே இயக்கப்பட்ட அரசுப்பேருந்தில் குரங்காட்டியும் அவருடன் ஒரு குரங்கும் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். பேருந்து இருக்கையில் அமர்ந்துகொண்ட குரங்கு இறங்க மறுத்துள்ளது. ஓட்டுநர் விலங்குகள் நல விரும்பி என்பதால் குரங்கை துன்புறுத்தாமல் பேருந்தை இயக்கியுள்ளார். ஆனால், அவர் அவ்வாறு இயக்கி இருக்கக்கூடாது. அவர் இதை விளையாட்டுத்தனமாக செய்துள்ளார். அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது. சில நிமிடங்களில் ஸ்டீயரிங்கை விட்டு குரங்கு இறங்கியுள்ளது. இதுகுறித்து பயணிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை” என்றார்.