வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (06/10/2018)

கடைசி தொடர்பு:12:28 (06/10/2018)

மாற்று சாதி வாலிபரை காதலித்த இளம்பெண்! - ஊரார் முன்பு தந்தை கொடுத்த கொடூர தண்டனை

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வேற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக இளம் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெண்
 

சமீபத்தில் தெலங்கானாவில் பட்டப்பகலில் பிரனய் என்பவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் அவரின் மனைவி 5 மாத கர்ப்பிணி. அவரின் கண்முன்னே பிரனய் வெட்டிச் சாய்க்கப்பட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஆணவக்கொலைக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், பீகாரில் வேற்று சாதி இளைஞரைக் காதலித்ததற்காக பெண்ணை மரத்தில் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். 

பெண்
 

பீகார் மாநிலம், நவடா மாவட்டத்தில் ராஜவுளி என்னும் கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த வேற்று சாதி இளைஞரைக் காதலித்து வந்தார். இந்த விவகாரம் வீட்டுக்குத் தெரிய வர அவரை வீட்டிலேயே சிறைப்பிடித்து வைத்துள்ளனர். இதையடுத்து, கடந்த செப்.30-ம் தேதி அந்தப் பெண் வீட்டிலிருந்து தப்பித்துச் சென்று தன் காதலரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பெண்ணின் குடும்பத்தார், பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து வந்துவிட்டனர். ராஜவுளி கிராமத்தின் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. நடந்த சம்பவங்களை பெண்ணின் குடும்பத்தார் விவரித்தனர்.

பெண்

பெண்ணை தாக்கும் தந்தை..
 

ஊர் பெரியவர்கள்  `அந்தப் பெண் செய்த தவறுக்காக,  மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கொடுத்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தார் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் பல மணி நேரத்துக்கு அந்தப் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கினர். பெண்ணின் தந்தை முதலில் அடிக்க, ஊர் மக்கள் ஒவ்வொருவராக அந்தப் பெண்ணைத் தாக்கினர். அந்தப் பெண் பயத்தில் நடுங்கி, கதறி அழுதார். அந்தக் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இளம் பெண் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதுகுறித்து பீகார் மாநில அரசுத் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. உள்ளூர் ஊடகங்கள் தண்டனை கொடுத்த பஞ்சாயத்து தலைவர்களிடம் இதுபற்றி கேட்டனர். ‘அந்தப் பெண் வேறு சாதி இளைஞரைத் திருமணம் செய்தது தவறு. எங்கள் சாதியைச் சேர்ந்தவரை அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதற்கு தான் இந்தத் தண்டனை’ என்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க