வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (06/10/2018)

கடைசி தொடர்பு:19:09 (06/10/2018)

அலற வைக்கும் சந்தை இறக்கம்... முதலீட்டைத் தொடரலாமா, வேண்டாமா?!

வாரன் பஃபெட் போன்ற தேர்ந்த முதலீட்டாளர்கள் இது போன்ற சந்தடிகளை எதிர்கொள்ளும்விதமே வேறு. அவர் பணம் வளர்க்கும் கலையை ஒரு முட்டையிலிருந்து குஞ்சு உருவாகும் நிலைக்கு ஒப்பிடுகிறார். முட்டை முதிர்ந்து குஞ்சு வெளிவரும் வரை தாய் அதை அடைகாப்பது போல, முதலீட்டாளர்களும் பொறுமை காக்க வேண்டியது அவசியம் என்கிறார்.

அலற வைக்கும் சந்தை இறக்கம்... முதலீட்டைத் தொடரலாமா, வேண்டாமா?!

டந்த இரு வாரங்களாகப் பொருளாதாரச் சந்தையில் ஏகப்பட்ட ஏற்றஇறக்கங்கள். சீராகச் சென்றுகொண்டிருந்த ஐ.எல்&எஃப்.எஸ் குழுமத்தின் பேஅவுட்டுகள் சரியான நேரத்தில் வராமல் சற்றுத் தடுமாறின. அதனால் அதன் தரக் குறியீடுகள் சரிந்தன. அதில் முதலீடு செய்திருந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் நிகரச் சொத்து மதிப்பும் (NAV) குறைந்தன. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல், அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், வர்த்தகப் போர், கச்சா எண்ணெய் விலையேற்றம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைந்தது போன்ற பல பிரச்னைகளால் ஏற்கெனவே மதில் மேல் பூனையாக நின்றிருந்த சந்தை, தற்போது இறக்கத்தைச் சந்தித்திருக்கிறது.  

இப்போது சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான்: முதலீட்டைத் தொடர்ந்து சந்தையில் வைத்திருப்பதா அல்லது விற்று வெளியேறுவதா?  

இதற்கு விடை காணும்முன், ஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல் தற்சமயம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். மத்திய அரசு தலையிட்டு, அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவை மாற்றி உள்ளது. ஐ.எல்&எஃப்.எஸ்-ன் முக்கிய முதலீட்டாளர்களான எல்.ஐ.சியும், ஸ்டேட் பேங்க்கும் களத்தில் இறங்கி அதை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்கின்றன. கடந்த 30 வருடங்களாக நல்ல முறையில் செயல்பட்டுவந்த இந்த நிறுவனத்துக்கு, கடன் ரூ.91,000 கோடி இருந்தாலும், அதன் சொத்து மதிப்பு ரூ.1,15,000 கோடி என்று அரசு அறிவித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும்முன் இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்கவே மத்திய அரசு முனைகிறது.

ஆனால், இதுபோன்ற வேறு பிரச்னைகள் கிளம்புமா என்ற கவலை முதலீட்டாளர்களை வாட்டுகிறது. கடந்த 4 வருடங்களாக 20%, 30% என்று லாபத்தை அள்ளித் தந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் செயல்பாட்டு வேகமும் குறைந்து வருவது குறித்து ஏற்கெனவே முதலீட்டாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். வாராக்கடன் பிரச்னை தீவிரமடைந்தபோது, வங்கி முதலீடுகளுக்கு இனி உத்தரவாதமில்லை என்ற பேச்சு எழுந்தது போல், இது மியூச்சுவல் ஃபண்டுகளின் அஸ்தமனத்துக்கு அறிகுறி என்று பேசுவோரும் உண்டு. 

வரும் மாநிலத் தேர்தல்கள், பொதுத்தேர்தல் ஆகியவை முடிந்து சந்தை பழையபடி நிலையான ஏற்றத்துக்குத் திரும்புவதற்கு 6-8 மாத காலம் ஆகும். இதுபோன்ற ஏற்றஇறக்கம் நிறைந்த முந்தைய காலகட்டங்களில், பலர் தங்கள் முதலீடுகளைக் குறைந்த லாபம் மற்றும் நஷ்டத்துக்கு விற்று வெளியேறி உள்ளனர். மறுபடி நிலையான ஏற்றம் வரும்போது, இவர்கள் அதன் நற்பலனை அனுபவிக்க இயலாமல் வருந்த நேரிட்டது. சந்தை எப்போதுமே ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது என்று தெரிந்தே இதற்குள் வருபவர்கள், இறக்கத்தை நேரில் கண்டதும் பின்வாங்குவது எந்த விதத்திலும் சரியல்ல. 

சந்தை இறக்கம்

வாரன் பஃபெட் போன்ற தேர்ந்த முதலீட்டாளர்கள் இது போன்ற சந்தடிகளை எதிர்கொள்ளும்விதமே வேறு. அவர் பணம் வளர்க்கும் கலையை ஒரு முட்டையிலிருந்து குஞ்சு உருவாகும் நிலைக்கு ஒப்பிடுகிறார். முட்டை முதிர்ந்து குஞ்சு வெளிவரும் வரை தாய் அதை அடைகாப்பது போல, முதலீட்டாளர்களும் பொறுமை காக்க வேண்டியது அவசியம் என்கிறார். ஒரு வீட்டையோ, நிலத்தையோ, தங்கத்தையோ பற்றி  நாம் அடிக்கடி விலையைச் சோதிப்பதோ, ஏற்ற இறக்கத்துக்குத் தகுந்தவாறு விற்று வாங்குவதோ இல்லை. இவற்றுக்குத் தரும் காலஅவகாசத்தை, சந்தை சார்ந்த முதலீடுகளுக்கும் தர வேண்டும். வாரன் பஃபெட் வைத்திருக்கும் பல முதலீடுகள் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டவை. சந்தையின் போக்குக்கேற்றாற்போல் சாய்ந்திருந்தார் என்றால், இன்று உலகளாவிய புகழைப் பெற்றிருக்க மாட்டார்.  

சந்தை இறக்கத்தை எதிர்கொள்ள வெறும் தைரியம் மட்டும் போதாது. நாம் செய்திருக்கும் முதலீடுகளின் மேல் நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கை வருவதற்கு நாம் முதலீட்டில் இறங்கும்முன்பே நன்கு ஆராய்ந்திருக்க வேண்டும். மீடியாவோ, நண்பர்களோ சிபாரிசு செய்தவை என்றில்லாமல், ஒரு முதலீட்டின் பல கூறுகளையும் சீர்தூக்கிப் பார்த்து பின் முதலீடு செய்வது அவசியம். 

பங்கு முதலீடு என்றால், அதன் பிஇ ரேஷியோ, கடன் விகிதம், பிபி ரேஷியோ, கேஷ் ஃப்ளோ, என்டர்ப்ரைஸ் வேல்யூ, விலைப்போக்கு, எதிர்கால முக்கியத்துவம், அதன் போட்டியாளர்களின் நிலை போன்றவற்றை அறிந்துபின் முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் என்றால், அதன் ஃபண்ட் மேனேஜர், பென்ச்மார்க் எனப் பல விஷயங்களை எடை போட்டு முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். இப்படி நன்கு ஆராய்ந்து பார்த்து செய்த முதலீடு, இறக்கத்தைச் சந்திப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. சந்தை அப்படித்தான். ஏற்ற இறக்கங்கள் சகஜம்.
 
அடிக்கடி சந்தையின் சந்தடிகளுக்குச் செவி சாய்ப்பது, நல்ல புரிதல் இல்லாமல் அடுத்தவர் கூற்றை நம்பி இறங்குவது, சந்தை உச்சத்தில் இருக்கும்போது முதலீடு செய்வது, சற்று இறக்கம் வந்தாலும் வெளியேறுவது போன்ற பொதுவான தவறுகளைத் தவிர்த்தாலே நம் செல்வத்தை நல்ல முறையில் வளர்க்க இயலும். பங்குச் சந்தையாக இருக்கட்டும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதாக இருக்கட்டும், அதை நன்கு புரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள். ஏற்றஇறக்கங்களுக்கு அஞ்சாதீர்கள்; குறைந்தபட்சம் ஆண்டுக்கொரு முறை உங்கள் முதலீடுகளைப் பரிசீலனை செய்து, தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்; நீண்ட காலத்துக்கு சந்தை முதலீடுகளைத் தொடருங்கள். இவை போன்ற பழக்கங்கள் உங்களைச் சிறந்த முதலீட்டாளர்களாக்கும்.

சுந்தரி ஜகதீசன்

- சுந்தரி ஜகதீசன்


டிரெண்டிங் @ விகடன்