வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (06/10/2018)

கடைசி தொடர்பு:17:24 (06/10/2018)

`தமிழக இடைத்தேர்தல் தேதியைத் தற்போது அறிவிக்க இயலாது!’ - தேர்தல் ஆணையர் சொல்லும் காரணம்

தமிழகத் தேர்தல் ஆணைய அதிகாரி கேட்டுக்கொண்டதால் தற்போது, இடைத்தேர்தல் குறித்த தேதியை அறிவிக்க இயலாது என்று இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.ராவத்

மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலச் சட்டமன்றங்களின் ஆட்சிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையில் தெலங்கானா சட்டமன்றமும் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவால் கலைக்கப்பட்டது. அதையடுத்து, 5 மாநிலத் தேர்தல் அறிவிப்பு குறித்து எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வந்தது. இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத், ``மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மட்டும் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் 28 தேதியும் ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களுக்கு டிசம்பர் 7-ம் தேதியும் தேர்தல் நடைபெறும். சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு நவம்பர் 12-ம் தேதியும் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதியும் தேர்தல் நடைபெறும். ஐந்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும். யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒப்புகை வாக்குச்சீட்டு வழங்கும் இயந்திரம் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்படும்’’ என்றார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்துப் பேசிய ஓ.பி.ராவத், ``மழை காரணமாகத் தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வேண்டாம் என்ற தமிழகத் தேர்தல் ஆணைய அதிகாரி கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தலுக்கான தேதியை தற்போது அறிவிக்க இயலாது' என்று தெரிவித்தார்.