வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (06/10/2018)

கடைசி தொடர்பு:20:40 (06/10/2018)

`பா.ஜ.க என்ன சூப்பர் தேர்தல் ஆணையமா?’ - கொதிக்கும் காங்கிரஸ்

ஐந்து மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் ராஜஸ்தானில் அம்மாநில முதல்வர் வசுந்திரா ராஜீ சிந்தியா விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று அறிவித்தார். இந்த விவகாரத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் இன்று 12.30 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், செய்தியாளர்களுடனான சந்திப்பு 3.30 மணிக்குத்தான் நடைபெற்றது. அப்போதுதான், ஐந்து மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் வைத்து, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஒருவேளை முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்திருக்கும். இந்தத் திட்டத்தை அறிவித்திருக்க முடியாது.  பா.ஜ.க சூப்பர் தேர்தல் ஆணையமாகச் செயல்படுவதாக, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டர் பதிவில், 'கர்நாடகா மாநிலத் தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையத்துக்கு முன்னதாக பா.ஜ.க ஐ.டி செல் தலைவர் ட்விட்டரில் பதிவிடுகிறார். ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அவருக்கு வேண்டியதைச் செய்வதற்காக, தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தள்ளிவைக்கிறது. பா.ஜ.க சூப்பர் தேர்தல் ஆணையமாகச் செயல்படுகிறதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.