வெளியிடப்பட்ட நேரம்: 18:56 (06/10/2018)

கடைசி தொடர்பு:19:11 (06/10/2018)

``பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா - ரஷ்யா உறுதி!’’ எஸ்-400 ஏவுகணை உட்பட 8 ஒப்பந்தங்கள்

``பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா - ரஷ்யா உறுதி!’’ எஸ்-400 ஏவுகணை உட்பட 8 ஒப்பந்தங்கள்

யங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், அதை முற்றிலுமாக ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன. பயங்கரவாதம் என்ற கொடூரச் செயலை எதிர்த்து உலக நாடுகளுடன் இணைந்து உறுதியான, வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் இருநாடுகளும் தெரிவித்துள்ளன.

இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர், இந்தியா - ரஷ்யா நாடுகள் சார்பில் இணைந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. பயங்கரவாத பிரச்னையில் இரட்டை நிலைப்பாட்டை எந்தவொரு நாடும் கொண்டிருக்கக் கூடாது. தீவிரவாத அமைப்புகளின் நெட்வொர்க்கை முற்றிலுமாக அழிப்பதுடன், அந்த அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளைக் கண்டிப்பதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். 

பயங்கரவாதக் கொள்கை, அது தொடர்பான பிரசாரம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பிரசாரங்களையும் முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும். சர்வதேச அளவில் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக ஒருங்கிணைந்த மாநாட்டை ஐ.நா உடனடியாக நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும். ஆப்கானிஸ்தான் தலைமையிலான அமைதி மற்றும் கூட்டுறவு முயற்சிகளை இந்தியாவும் ரஷ்யாவும் ஆதரிப்பது என்றும் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை, கல்வி மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, தரையிலிருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய எஸ் - 400 ஏவுகணைகளை இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தமும் இதில் அடங்கும். வர்த்தகம், ரயில்வே, அணுசக்தி மற்றும் குறு, சிறு தொழில்துறையில் இதர ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

பயங்கரவாதம்: எதிர்க்க விளாடிமிர் புடின் - மோடி உறுதி

இதைத் தொடர்ந்து, இந்தியா - ரஷ்யா இடையே வர்த்தக உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, "உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியப் பொருளாதாரம் அதீத வளர்ச்சி பெற்று வருகிறது. அதற்குக் காரணம், பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொண்ட கட்டமைப்புச் சீர்திருத்தங்கள்தான். அந்த வகையில், புதிய இந்தியாவை உருவாக்குவதன் மூலம், நாட்டு மக்கள் சிறப்பான வாழ்நிலையைப் பெறுவார்கள். ரஷ்யாவைப் பொறுத்தவரை, இந்தியாவின் மிக நீண்டகால பங்குதாரராகத் திகழ்கிறது. இந்தியாவுடனான ரஷ்யாவின் நல்லுறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன" என்றார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ``தொழில்துறை ஒத்துழைப்பை முன்னேற்றம் காணச் செய்ய வேண்டிய நிலையில் இந்தியாவும் ரஷ்யாவும் உள்ளன. அதற்கு இடையூறாக உள்ள தடைகளைத் தகர்க்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேம்பட்டு வருவதற்கு நன்றி" என்றார். 

இதற்கிடையே, டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஐ சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய குடியரசுத் தலைவர், ``இந்தியா- ரஷ்யா இடையே இருதரப்பு வர்த்தகம் வரும் 2025-ம் ஆண்டுக்குள் 30 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டும். இந்தியாவின் வளர்ச்சிக்காக ரஷ்யா மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றிவருகிறது. அதிலும், அதிபர் புதின், இந்தியாவின் முன்னேற்றத்தில் தனிப்பட்ட வகையில் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்தியாவுடனான ரஷ்யாவின் கலாசார உறவுகள் நீண்ட பாரம்பர்யம் மிக்கது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்