வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (06/10/2018)

கடைசி தொடர்பு:21:30 (06/10/2018)

`விவசாயிகளுக்கு ஏன் சலுகை அளிக்க முடியவில்லை?’ - பா.ஜ.க-வைச் சாடும் ராகுல் காந்தி

பணக்காரர்களுக்கான 3 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்ய முடிகிறது. ஏன் விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு கருணை காட்ட முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

ராகுல் காந்தி

மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் அடுத்த மாதம் இறுதியிலும் டிசம்பர் மாதத் தொடக்கத்திலும் நடைபெறவுள்ளது. எனவே, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்தநிலையில், மத்தியப் பிரதேசத்தில் `ஆதிவாசி எக்தா பரிஷத்’ அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், `பழங்குடியினருக்கான சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும். 2004-ம் ஆண்டு முதல் நான் அரசியலில் இருந்துவருகிறேன்.

இதுவரையில் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று பொய் வாக்குறுதி கொடுத்தது. 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பீடு நடவடிக்கை மூலம் கறுப்புப் பணம் சட்டபூர்வமாக மாற்றப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை. யாரும் 15 லட்சம் ரூபாய் பணமும் பெறவில்லை. நிரவ் மோடி 35,000 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். 10,000 கோடியை ஏமாற்றிவிட்டு நிதி அமைச்சரிடம் சொல்லிவிட்டே விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார். பணக்காரர்களுக்கான 3,00,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்ய முடிகிறது. ஆனால், ஏன் விவசாயிகள் மற்றும் ஏழைகள் மீது கருணை காட்ட முடியவில்லை' என்று கேள்வி எழுப்பினார்.