வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:06:30 (07/10/2018)

முடிவுக்கு வந்தது `ஆப்ரேஷன் ரக்‌ஷம்’; இந்தியா வந்தார் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி!

இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி விசாகப்பட்டினம் அழைத்துவரப்பட்டார். 

அபிலாஷ் டோமி

கோல்டன் க்ளோப் எனப்படும் பாய்மர படகில் உலகைச் சுற்றி வரும் பாரம்பரிய போட்டியில் இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி கலந்துகொண்டார். சுமார் 30,000 மைல் தூரம் கடலில் பயணிக்கும் இந்தப் போட்டியில் 10,000 மைல்களுக்கு மேல் பயணித்த நிலையில் மோசமான வானிலை காரணமாக அவரது படகு விபத்தில் சிக்கியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எஸ்.வி.துரியா படகில்  அவர் பயணம் மேற்கொண்டார். போட்டியின் 84 வது நாளில் மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 3,500 கி.மீ தூரத்தில் சென்றுகொண்டிருக்கும்போது கடும் காற்று மற்றும் மழை காரணமாக இந்த விபத்து நடந்தது.

டோமி

மோசமான வானிலை காரணமாக அவரை மீட்பதில் சிக்கல் இருந்தது. நடுக்கடலில் தத்தளித்த அவரை மீட்க இந்திய கடற்படையும் கடுமையாக முயற்சிகள் எடுத்தது. டோமியை மீட்டு இந்தியா கொண்டுவரும் திட்டத்துக்கு `ஆப்ரேஷன் ரக்‌ஷம்’ என்று பெயர் வைக்கப்பட்டது. இறுதியாக 3 -வது  நாள், அதாவது செப்டம்பர் 24 -ம் தேதி அவரை  பிரெஞ்ச் ஓசிரிஸ் கப்பல் மீட்டது. இந்த விபத்தில், அவரது முதுகுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு நெதர்லாந்து நாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து டோமி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

சாட்புரா

இந்நிலையில் நேற்று டோமி  இந்தியா கொண்டு வரப்பட்டார். டோமியை மீட்கும் பணிக்கு இந்தியாவில் இருந்து சென்ற கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் சாட்புரா என்னும் கப்பலில் இந்தியா அழைத்துவரப்பட்டார். கப்பலில் அவருக்குத் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் தான் அழைத்துவரப்பட்டார். 

விசாகப்பட்டினம் கொண்டுவரப்பட்டுள்ள டோமி கடற்படை மருத்துவமனையான ஐ.என்.ஹெச்.எஸ் கல்யானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கப்பல் பயணத்தின் போது கேப்டன் அலோக் ஆனந்தா வுடன் பேசினார். அவர் டோமியுடம், மீட்புப்பணிகள் குறித்து விவரித்தார்.  மீட்புப்பணியின் போது பணியில் இருந்த அலோக் அனந்தாவின் தந்தை இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிலாஷ் டோமி இந்தியா கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து `ஆப்ரேஷன் ரக்‌ஷம்’ முடிவுக்கு வந்தது.