வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/10/2018)

கடைசி தொடர்பு:06:00 (07/10/2018)

`வார்டுக்கு ஒரு பாதுகாவலர்’ -சுற்றுச்சூழலை காக்க புதுடெல்லி அரசு புதிய திட்டம்!

காற்று மாசுபாடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும் விதமாகச் சுற்றுச்சூழல் காவலர்கள் எனும் ஒரு பிரிவினரை நியமித்து வருகிறது புது டெல்லி அரசு.

புதுடெல்லி முதல்வர்

புதுடெல்லி நகரத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் காவலர்களை(environment marshals) நியமிக்க முடிவெடுத்துள்ளது புதுடெல்லி அரசு. 

கடந்த சில வருடங்களாக இந்தியாவிலேயே மிக அதிகமாகக் காற்று மாசுபாடு ஏற்பட்டிருக்கும் நகரம் புது டெல்லி. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான முயற்சிகளை புது டெல்லி அரசு எடுத்து வருகிறது. ஆனாலும் காற்று மாசுபாடு குறையவில்லை. காற்று மாசுபாடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும் விதமாகச் சுற்றுச்சூழல் காவலர்கள் எனும் ஒரு பிரிவினரை நியமித்து வருகிறது புது டெல்லி அரசு. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் பிளாஸ்டிக்கை எரிப்பது, பிற கழிவு பொருட்களை பொது இடங்களில் கொட்டி மாசுபடுத்துவது, மிக அதிகமான தூசு மாசுபாட்டை உருவாக்குவது மற்றும் இன்னும் பல்வேறு மாசுபொருட்களை எரிப்பது போன்றவற்றில் இருந்து மக்களைத் தடுப்பதே இவர்களின் வேலை. பிளாஸ்டிக், இதர கழிவு பொருட்கள் மற்றும் காய்ந்த இலைகளை எரிப்பது, கட்டுமான பகுதிகளில் தூசு மாசுபாட்டை ஏற்படுத்துவது புது டெல்லி நகரத்தில் தடை செய்யப்பட்ட செயல்களாகும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் எளிதில் இயங்க முடியும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே வேலையில் நியமிக்கப்படுகிறார்கள் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள். 

கடந்த செப்டம்பர் வரை புது டெல்லியில் 83 சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அதிகமாக வார்டுக்கு ஒரு சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் என 272 நகராட்சி வார்டுகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். புது டெல்லியின் சுற்றுச்சூழல் துரை அமைச்சர் இம்ரான் ஹுசைன் இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதுவரை நியமிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்கிறார் அவர்.