வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:14:39 (07/10/2018)

‘ஓவர் ஸ்பீடு’ - சைக்கிளில் சென்றவரிடம் ரூ.2000 அபராதம் வசூலித்த கேரள போலீஸ் 

திருவனந்தபுரத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்ற  வாலிபரை வழி மறுத்த காவல்துறையினர் ‘ஓவர் ஸ்பீடு’ எனக் கூறி 2000 ரூபாய் வசூலித்துள்ளனர்.

கேரளா

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காசிம் என்பவர் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் கும்பாலா பகுதியில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கேரள போலீஸார் காசிமை வழிமறித்துள்ளனர். சைக்கிளில் வேகமாக ஓட்டி வந்ததற்காக அபராதம் கட்டுங்கள் என்ற காவல்துறையினர் வார்த்தைகள் காசிமை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் ஹெல்மெட் ஏன் அணியவில்லை என்று கூறி சைக்கிள் டயரை பஞ்சர் செய்துள்ளனர். காவல்துறையினரிடம் போராட முடியாது என முடிவெடுத்த காசிம் அபராதம் செலுத்த ஒத்துக்கொண்டார். 100, 200 கேட்பார்கள் என எண்ணியுள்ளார். ஆனால் கேரள போலீஸார் 2000 ரூபாய் தீட்டியுள்ளனர். சிறிதுநேரம் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காசிம் 2000 ரூபாய் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 500 ரூபாய்க்கு மட்டும் ரசீது எழுதிக் கொடுத்தனர். அதில் இருசக்கர வாகன எண்ணைப் பதிவு செய்து கொடுத்துள்ளனர். 

கூலி வேலை செய்யும் காசிமின் ஒரு நாள் வருமானம் 400 ரூபாய். ஐந்து நாள் சம்பளத்தை இழந்த காசிம் தனது வருத்தத்தை முகநூலில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இது வைரலாக பரவியதையடுத்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையில் கும்பாலா பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.