வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (07/10/2018)

கடைசி தொடர்பு:14:20 (07/10/2018)

பாலியல் வன்கொடுமை எதிரொலி - அச்சத்தால் குஜராத்தை விட்டு வெளியேறும் தொழிலாளர்கள்!

குஜராத்தில் 14 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் எதிரொலியாக அங்குள்ள பிற மாநிலத்தவர்கள் குஜராத்தை விட்டு வெளியேறிவருகின்றனர். 

குஜராத்

Photo Credits : Twitter/@celebsrumor5

உத்தரபிரதேசம், பீஹார் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக வேலை தேடி நாள் தோறும் பலர் குஜராத் மாநிலத்துக்குச் செல்கின்றனர். அவர்கள் அங்குக் கட்டட வேலை, வியாபாரம் போன்ற பல தொழில்களைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் குஜராத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாத பெண் குழந்தை பீஹாரை சேர்ந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து குஜராத் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

போராட்டங்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை போன்ற பிற வழக்குகளில் சுமார் 150 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் உ.பி, பிஹார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதனால் பிறமாநிலத்தவர்களை கண்டாலே குஜராத் மக்கள் அடிக்கத் தொடங்கி விடுகின்றனர். இதற்குப் பயந்து அங்கு வேலை செய்யும் பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.