வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (08/10/2018)

கடைசி தொடர்பு:07:11 (08/10/2018)

பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசுகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.

எடப்பாடி பழனிசாமி


பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க அனுமதி கேட்டு கடந்த மாதம் 30-ந் தேதி பிரதமர் அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, முதலமைச்சர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றுள்ளார். டெல்லியில் உள்ள மக்களவை துணை சபாநாயகர் அலுவலகத்தில் அ.தி.மு.க எம்.பிக்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமரை, தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பில், எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அமைச்சரவை ஒப்புதலை விரைவில் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது. அதே போல, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், ஓ.பன்னீர் செல்வம்- டி.டி.வி தினகரன் சந்திப்பு குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.