வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (08/10/2018)

கடைசி தொடர்பு:08:02 (08/10/2018)

தீவிரப் பிரசாரத்தில் ராகுல்காந்தி - 15 அடி தூரத்தில் நடந்த தீ விபத்து!

மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி சென்ற வேன் அருகில் கேஸ் பலூன்கள் வெடித்துச் சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டது. 

ராகுல்

இந்தியாவில் அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசியக் கட்சிகள் இப்போதே தங்களின் தீவிர பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. 

இந்நிலையில் நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார். ஜபால்பூர் மாவட்டத்தில் சுமார் 8 கிமீ வரை நடைபெற்ற இந்தப் பேரணியில் திறந்த வாகனத்தில் ராகுல்காந்தி பிரசாரம் செய்து வந்தார். அப்போது அவரின் வாகனம் அருகே எதிர்பாராதவிதமாக கேஸ் பலூன்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் ராகுல்காந்தி வாகனத்தில் நின்று அனைவருக்கும் கையசைத்தபடி வந்துகொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு அருகில் ஒருவர் ஆரத்தி விளக்குகளுடன் கூட்டத்தை தள்ளிவிட்டு ராகுல்காந்தியை நோக்கி முன்னேறி வருகிறார். அந்த வேளையில் கூட்டத்தில் நின்றிருந்த மற்றொருவர் தன் கைகளில் பலூன்களை வைத்திருந்தார். ஆரத்தி வெப்பம், கேஸ் பலூன்கள் மீது பட்டதால் அவை அனைத்தும் அதிக தீயுடன் ஒரு நொடியில் வெடித்துச் சிதறின. தீ பற்றியதுக்கும் ராகுல்காந்திக்கும் இடையே 15 அடி தூரம்தான் இருந்தது. இதில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

இந்த விபத்தில் அருகில் இருந்தவர்களுக்குச் சிறு காயம் ஏற்பட்டது. உடனடியாக ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பிறகு அருகில் இருந்த கூட்டம் கலைக்கப்பட்டது. பின் ராகுல் தனது பிரசாரத்தைத் தொடர்ந்தார்.