வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (08/10/2018)

கடைசி தொடர்பு:10:47 (08/10/2018)

`இனி வெளிநாடுகளிலும் இந்தியர்கள் வண்டி ஓட்டலாம்’- சுற்றுலாவைக் கவர புதிய திட்டம்

வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்கள் குறிப்பிட்ட நாடுகளில் வாகனத்தை இயக்கும் போது இந்திய ஓட்டுநர் உரிமத்தையே பயன்படுத்திக்கொள்ளலாம் வாடகை கார் ஓட்டுநர்களையோ சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற வேண்டிய சிக்கல் இருக்காது.

இந்தியர்கள்

ஆஸ்திரேலியா அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் ஓர் அங்கமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அவர்களது நாட்டின் வாகன ஓட்டுநர் உரிமத்தையே பயன்படுத்தலாம் என அறிவித்தது. ஆஸ்திரேலியாவில் சாலை விதிகள் இந்தியாவில் இருப்பது போன்றே காணப்படுகிறது. சாலையின் இடதுபுறம் வாகனத்தை இயக்க வேண்டும் ஓட்டுநர் இருக்கை வாகனத்தின் வலதுபுறம் இருக்கும். சவுத் வேல்ஸ், குயின்ஸ் லேண்ட் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே இந்தியர்கள் இயக்க முடியும். 3  மாதங்களுக்கு இந்தியர்களின் ஓட்டுநர் உரிமம் செல்லும். ஆனால், அவை ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் இல்லையென்றால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.


 பிரிட்டன், பிரான்ஸ், நார்வே, அமெரிக்கா,ஜெர்மனி, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சர்வதேச ஓட்டுநர் உரிமம் கட்டாயம் இருக்க வேண்டும் என அவசியமில்லை.  பிரான்சில் இந்திய ஓட்டுநர் உரிமத்தை பிரெஞ்சு மொழியில் மொழிப்பெயர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம். இது ஒரு வருடத்துக்கு செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இந்தியர்கள் ஒரு வருடத்துக்கு மேலாக வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் அமெரிக்காவுக்கு அவர்கள் வந்த நாளுக்காக பத்திரங்களை வைத்து இருக்கவேண்டும். நார்வேயில் 3 மாதங்களுக்கும், ஜெர்மனியில் 6 மாதங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில், இந்திய ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் அதனுடன் ஓட்டுநரின் புகைப்படம் மற்றும் கையொப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், அங்கு வாடகைக்கு கார் எடுத்தால் சரவதேச ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.