வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (08/10/2018)

கடைசி தொடர்பு:11:10 (08/10/2018)

13 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் - உச்சகட்ட பாதுகாப்பில் ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தேர்தல்

ஜம்மு - காஷ்மீரில் உள்ள மொத்தம் 1,145 வார்டுகளுக்கு அக்டோபர் 8,10,13,16 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி இன்று 422 வார்டுகளுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மட்டும் 4,42,159 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள் முழுவதும் சுமார் 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

ஜம்மு - காஷ்மீரை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக் கூறிவந்த பிரிவினைவாத இயக்கத்தினர் இன்று நடைபெறும் தேர்தலின்போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக் கூடும் என்ற தகவலில்படி அவற்றைத் தடுக்கும் வகையில் தேர்தல் நடைபெறும் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 13 ஆண்டுகளுக்குப் பின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், தேர்தலை ஒட்டி ஜம்மு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீர் பகுதியில் செல்போன், இன்டர்நெட் சேவைகள் முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இன்டெர்நெட் வேகம் 2G அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து தேர்தல் வேட்பாளர்களும் போலீஸாரின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். காலை முதல் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.