வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (08/10/2018)

கடைசி தொடர்பு:11:45 (08/10/2018)

`அரசியல் சாசனத்துக்கு எதிரான தீர்ப்பு!' - உச்சநீதிமன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் சீராய்வு மனு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கடந்த 2006-ல் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்த பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. கேரளாவில் அடுத்தடுத்து ஆட்சி மாறியதால் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படவில்லை. தற்போது கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 

சபரிமலை தொடர்பான வழக்கைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திராசூட், இந்து மல்கோத்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த செப்டம்பர் 28-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கோயில் வழிபாடுகளில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டக் கூடாது. பெண்கள், ஆண்களுக்கு நிகரானவர்கள். வழிபாடு நடத்த அவர்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். ஐயப்ப பக்தர்கள், குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் என்று கூற முடியாது'' என்றார். 

சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இதையடுத்து தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியானது. இந்த நிலையில், தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் ஷியாலஜா விஜயன் இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், கோயிலில் அனைத்து வயதுப் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.