வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (08/10/2018)

கடைசி தொடர்பு:13:21 (08/10/2018)

ஆசிய பாராலிம்பிக் போட்டி: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்குத் தங்கம்

ஆசியக்கோப்பை பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சந்தீப் செளத்ரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

 சந்தீப் செளத்ரி - இந்தியா

ஆசியக்கோப்பை விளையாட்டுப்போட்டிகள் முடிவடைந்ததையடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய அளவிலான பாராலிம்பிக் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் சந்தீப் செளத்ரி பங்கேற்றார். உடற்குறைபாடு, கால்களின் நீளங்களில் உள்ள வேறுபாடு, பலவீனமான தசையைக் கொண்டவர்கள் பங்கேற்கும் பிரிவான F42-44/61-64-ல் பங்கேற்றார். தனக்குக் கொடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பில் 60.01 மீட்டர் ஈட்டி எறிந்து செளத்ரி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கான முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். இலங்கை வீரர் சந்திமா சம்பத் ஹேட்டி 59.32 மீட்டர் எறிந்து இரண்டாம் இடத்தையும், இரானின் ஓமிதி அலி 58.97 மீட்டர் எறிந்து மூன்றாவது இடமும் பிடித்தனர். இந்திய அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலத்துடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

இந்தப்போட்டியின் தொடக்க விழாவில் பாரலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன் தேசியக்கொடியை ஏந்திச்சென்றார். உயரம் தாண்டுதல் பிரிவில் மாரியப்பனிடம் இருந்து தங்கப்பதக்கம் எதிர்பார்க்கலாம்.