வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (08/10/2018)

கடைசி தொடர்பு:15:07 (08/10/2018)

காங்கிரஸ்.. பி.ஜே.பி. மட்டுமே மோதும் ஜம்மு - காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்!

13 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் காஷ்மீர் மாநில உள்ளாட்சித் தேர்தல் குறித்த கட்டுரை...

காங்கிரஸ்.. பி.ஜே.பி. மட்டுமே மோதும் ஜம்மு - காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்!

ம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) - பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, அங்குக் கடந்த ஜூன் மாதம் முதல் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்தில், இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலை அந்த மாநில பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பி.டி.பி.), தேசிய மாநாட்டுக் கட்சியும் (என்.சி.பி.) புறக்கணித்துள்ளது. இதையடுத்து, மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யும், காங்கிரஸ் மட்டுமே இதில் போட்டிபோடுகின்றன.

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு கருதி நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தனித்தனியே தேர்தல்கள் நடத்தப்படுகிறது. அதன்படி, ``நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8, 10, 13, 16 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர் 17, 20, 24, 27, 29 மற்றும் டிசம்பர் 1, 4, 8, 11 ஆகிய தேதிகளில் ஒன்பது கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும்" என அந்த மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா அறிவித்திருந்தார். 

இதையடுத்து, முதற்கட்டமாக நகராட்சி அமைப்புக்கான முதற்கட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக, அங்குள்ள நகராட்சி அமைப்புகளுக்கான மொத்தமுள்ள 1,145 வார்டுகளில், 422 வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வார்டுகளைச் சார்ந்த 4,42,159 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி அந்த மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து மாலை 4 மணிவரை நடைபெற இருக்கிறது. 

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மக்களுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதில், ``சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்" என அம்மாநில பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சியும் (பி.டி.பி.), தேசிய மாநாட்டுக் கட்சியும் (என்.சி.பி.) தேர்தல் தேதி அறிவித்த சில நாள்களிலேயே அறிவித்திருந்தன. இதற்கு மத்திய அரசு எந்தப் பதிலும் அளிக்காத நிலையில், அந்தக் கட்சிகள் அறிவித்தபடி உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. 

ஜம்மு - காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்

மேலும், காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கும், ஹுரியத் மாநாட்டுக்  கட்சித் தலைவர் மிர்விஸ் உமர் ஃபரூக்கும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, அங்குள்ள பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். ஆதலால், இந்தத் தேர்தலை மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யும், காங்கிரஸுமே நேரடியாக எதிர்கொள்ள உள்ளன. அதிலும், பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்குட்பட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைக் களமிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அங்கு பி.ஜே.பி. வேட்பாளர்களுக்கு எதிராக வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், அந்தக் கட்சி போட்டியின்றி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்வகையில், அந்த மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றம் மிகுந்த வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு மேலும் கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதால் வேட்பாளர்கள் அனைவரும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும், அம்மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பிற பகுதிகளில் இணையச் சேவை 2ஜி-யாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

முதல்முறையாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடப்பதாலும், மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதாலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். 
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்விஸ் உமர் ஃபரூக், தனது ட்விட்டர் பக்கத்தில், ``யார் போட்டியிடப் போகிறார்கள் என்றுகூடத் தெரியாத நிலை என்பது பொதுமக்களுக்கு வேடிக்கையே... என்ன, ஒரு ஜனநாயகக் கேலிக்கூத்தாக இது அரங்கேறுகிறது!" என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்