வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (08/10/2018)

கடைசி தொடர்பு:18:20 (08/10/2018)

`பிரமோஸ் ஏவுகணை குறித்த ரகசியத் தகவல்கள் பரிமாற்றம்?’ - நாக்பூர் டி.ஆர்.டி.ஓ ஊழியர் கைது

பிரமோஸ் ஏவுகணை குறித்த ரகசியத் தகவலை பாகிஸ்தானுடன் பகிர்ந்துகொண்டதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழக (DRDO) ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

பிரமோஸ் ஏவுகணை

கைது செய்யப்பட்டவர் பெயர் நிஷாந்த் அகர்வால் என்று தெரிய வந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மற்றும் மகராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், ராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள், நிஷாந்தை நாக்பூரில் கைது செய்தனர். நாக்பூர் அருகில் உள்ள பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி மையத்தில் கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றிவந்த நிஷாந்த், ஏவுகணை தயாரிப்பின் முக்கிய தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் பகிர்ந்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பல்வேறு இடங்களில் தீவிரவாதத் தடுப்புப் போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரமோஸ் ஏவுகணை, உலகின் அதிவேகமான மிட்- ரேஞ்ச் ஏவுகணை என்ற பெருமை பெற்றது. இதை, நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், விமானம் மற்றும் தரையிலிருந்து எதிரிகளின் இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது. இந்திய ராணுவத்தின் முக்கியமான ஆயுதமாகக் கருதப்படுவது இந்தப் பிரமோஸ் ஏவுகணை. இந்தநிலையில், பிரமோஸ் குறித்த தகவல்கள் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் பகிரப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.