வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (08/10/2018)

கடைசி தொடர்பு:19:18 (08/10/2018)

`குரோர்பதி' நிகழ்ச்சி அடையாளம் காட்டிய `அட்சய பாத்திரம்' தேவேந்திர சிங்!

`குரோர்பதி' நிகழ்ச்சி அடையாளம் காட்டிய `அட்சய பாத்திரம்' தேவேந்திர சிங்!

ண்மையில் நடைபெற்ற `கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், அசாமைச் சேர்ந்த ஆசிரியை பினிதா ஜெயின் முதல் பரிசு வென்றார். இந்த ஆசிரியையின் கதை சோகம் நிறைந்தது. பினிதாவின் கணவரை, தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர். இன்று வரை அவர் வீடு திரும்பவில்லை. வாழ்வாதாரத்துக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தவர், இன்று குரோர்பதி நிகழ்ச்சியில் வெற்றிபெறும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

பினிதாவுக்கு இரு குழந்தைகள். ``தாயாரின் மனோபலம்தான் எங்களின் பலம்'' என்று தங்கள் தாயாரைப் பற்றி  பெருமை பிடிபடாமல் சொல்கின்றனர் அவரின் குழந்தைகள். குரோர்பதி நிகழ்ச்சி சூதாட்டம் போன்றது என்கிற கருத்து இருந்தாலும், அதன் மூலம் ஏழைகளும் திடீர் பணக்காரர்கள் ஆகிறார்கள். பல நல்ல விஷயங்களை இந்த நிகழ்ச்சி வழியே அறிந்துகொள்ள முடிகிறது. 

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுப் பணத்தை வைத்து, இளைஞர் ஒருவர் ஆயிரக்கணக்கான மக்களின் பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறார். அவர்தான் பரீதாபாத்தைச் சேர்ந்த தேவேந்திர சிங். இவர் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயர். சிங்குகளின் தாராள குணம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. உலகில் எங்குத் துயரம் நடந்தாலும் துயரத்தைத் துடைக்க முதலில் சிங்குகளின் படைகள்தான் களம் இறங்கும். குருத்வாராக்களில் உள்ள லங்கர் நிரப்பாத ஏழைகளின் வயிறு கிடையாது. 

தேவேந்திர சிங்கும் அத்தகைய ஈகை குணத்திலிருந்து விலகிவிடவில்லை. குரோர்பதி நிகழ்ச்சி வழியாகத்தான் இவரும் பிரபலம் அடைந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற தேவேந்திர சிங், தான் நடத்திவரும் `ஆப் கி ரஸோய்' என்கிற திட்டம் பற்றி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அமிதாப் பச்சினிடம் கூறினார். தேவேந்திர சிங்கின் இந்தத் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட அமிதாப், அசந்துபோனார். அவரை மனதாரப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தேவேந்திர சிங் 6,40,000 ரூபாய் பரிசாக வென்றார். இந்தப் பணத்தை தன் திட்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளப்போவதாக மேடையிலேயே தேவேந்திர சிங் அறிவிக்க, நெகிழ்ந்துபோனார்கள் பார்வையாளர்கள். 

குரோர்பதி

`ஆப் கி ரஸோய்' என்ற திட்டத்தின்படி, பரீதாபாத்தில் உள்ள தேவேந்திர சிங்கின், வீட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவிலிருந்து சிங்கின் வீட்டில் பெரிய பெரிய பாத்திரங்களில் உணவு தயாராகும். சனிக்கிழமையில் வாகனங்களில் பல்வேறு இடங்களுக்குக் கொண்டுசென்று ஏழை மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். ஒரு பொட்டலத்தில் 4 சப்பாத்திகள், காய்கறி, பருப்பு, அரிசிச் சாதம் ஆகியவை இருக்கும். ஒரு சாப்பாடுப் பொட்டலத்தின் விலை 5 ரூபாய்தான். இந்த 5 ரூபாய்கூட கொடுக்க முடியாதவர்களுக்கு இலவசமாக உணவுப் பொட்டலம் வழங்கப்படும்.

``சிறு வயதில் குருத்வாராக்களில் ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுவதைப் பார்த்து வளந்தவன் நான். புனே நகரில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அப்போது, வார இறுதி நாளில் அருகில் உள்ள அநாதை இல்லத்துக்குச் சென்று உணவு வழங்குவதை வழக்கமாகக்கொண்டிருந்தேன்.

2006-ம் ஆண்டு டெல்லியில் இரு குழந்தைகள் பட்டினியால் இறந்த செய்தி கேட்டு, மனம் இடிந்துபோனது. அப்போது முதல், உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிக்க முடிவெடுத்தேன். கிட்டத்தட்ட 12 வருடமாக இதைச் செய்துவருகிறேன். குரோர்பதி நிகழ்ச்சியில்  கிடைத்த பணத்தையும் இதற்குத்தான் பயன்படுத்தப்போகிறேன். இந்த நிகழ்ச்சி வழியாக நானும் பாப்புலர் ஆகிவிட்டேன். என் திட்டத்துக்கும் நிதியுதவி அளிக்க ஏராளமானோர் முன்வந்துள்ளனர்'' என்று சொல்கிறார் தேவேந்திர சிங்!

குரோர்பதி நிகழ்ச்சியால் பல நல்ல மனிதர்களையும் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்