வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (08/10/2018)

கடைசி தொடர்பு:20:48 (08/10/2018)

குற்றச்சாட்டுகளுக்கு ஒற்றை வரியில் பதில்! - கேள்விகளைத் தவிர்த்த நானா படேகர்

பாலிவுட் நடிகர் நானா படேகர், தன்மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

நானா

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். `2008-ம் ஆண்டு, `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' (Horn ok pleassss) என்ற இந்திப் படத்தில், `Nathni Utaro’ என்ற பாடலுக்கு நடனம் ஆட நான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது நானா என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நடனம் ஆட கற்றுக்கொடுப்பதுபோல் தகாத இடங்களில் கை வைத்தார்” என்று கூறி அதிர வைத்தார். 

நானா இந்தக் குற்றச்சாட்டை தொடக்கம் முதலே மறுத்து வந்தார். இந்நிலையில் நானா, தனுஸ்ரீ மீது தனது நற்பெயரைக் கெடுக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அதற்குத் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். இதற்குப் பதிலடியாக தனுஸ்ரீயும் போலீஸிடம் நானாவுக்கு எதிராகப் புகார் அளித்தார்.

இந்நிலையில் நானா படேகர் இன்று செய்தியாளர்களைச் சந்திப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தச் சந்திப்பை நேற்று மாலை அவர் ரத்து செய்துவிட்டார். இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “10 வருடத்துக்கு முன்னர் எது உண்மையோ அதுதான், இப்பவும் நீடிக்கிறது. அதுதான் எதிர்காலத்திலும் உண்மையாக இருக்கும்” என்ற ஒற்றை வரியுடன் முடித்துக்கொண்டார். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். “இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் அதிகம் பேச வேண்டாம் என்று எனது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மற்றபடி உங்களிடம் (ஊடகம்) பேசுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்று முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.