வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (08/10/2018)

கடைசி தொடர்பு:22:20 (08/10/2018)

குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசலாம்! - பெண் கைதிகளுக்கு மகாராஷ்ட்ரா அரசு கொடுத்த வசதி

சிறையில் இருக்கும் பெண் கைதிகள் தங்கள் குடும்பத்தோடு வீடியோ கால் செய்து பேசும் வசதியை மகாராஷ்ட்ரா மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள், செல்போன், டிவி, பிரியாணி போன்ற வசதிகளை அனுபவித்து வரும் செய்திகள் புகைப்படங்களாக வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ள சூழலில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வீடியோ கால் வசதித்திட்டம் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகளுக்குக் கருணை காட்டும்விதமாக, தங்களின் குடும்பத்தோடும் உறவினர்களோடும் வீடியோ கால் செய்து பேசிக்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 5 ரூபாய் பணம் செலுத்தி 5 நிமிடம் மட்டும் பேசிக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளார்கள். சிறைத்துறையில் பதிவு பெற்றுள்ள செல்பேசி எண்களோடு மட்டுமே பேச முடியும். இவர்கள் பேசும்போது ஒரு சிறைத்துறை அதிகாரி கண்காணித்தபடி இருப்பார். இவர்கள் பேசுவதற்காகப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை சிறைக்கைதிகளுக்கான நல நிதியிலிருந்து வாங்கியுள்ளார்கள். புனேயிலுள்ள எரவாடா சிறைச்சாலையில் சோதனை முறையில் இதைச் செயல்படுத்தியபின், தற்போது மாநிலத்திலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்தியுள்ளார்கள்.

இதற்கு முன்பாக, நாணயம் போட்டுப் பேசக்கூடிய காய்ன் தொலைபேசி மூலம் சிறைக்கைதிகள் தங்கள் உறவினர்களோடு ஐந்து நிமிடம் பேசும் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல வீடியோ கான்ஃபரன்ஸ் முறைப்படி சிறைக்கைதிகளை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும் முறையையும் செயல்படுத்தினார்கள். டெலிமெடிசின் எனப்படும், டெலிபோன் மூலம் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு கைதிகளின் உடல்நலக்குறைவுக்கு மருத்துவம் பார்க்கும் முறையையும் இந்த அரசு கொண்டுவந்தது. இப்படி சிறைக்கைதிகளின் நலனில் பல்வேறு முன்னெடுப்புகளை அதிகாரபூர்வமாகச் செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு மகாராஷ்ட்ரா முன்மாதிரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.