வெளியிடப்பட்ட நேரம்: 04:16 (09/10/2018)

கடைசி தொடர்பு:08:02 (09/10/2018)

குஜராத்தில் வெளிமாநிலத்தவர் மீதான தாக்குதல் - ராகுல் காந்தி கண்டனம்!

குஜராத் மாநிலத்தில், இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள்மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இத்தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.

ராகுல் காந்தி


கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, இம்மாநிலத்திலுள்ள சபர்கந்தா கிராமத்தில், 14 மாத பெண் குழந்தை ஒன்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது. இச்செய்கையில் ஈடுபட்டதாகப் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரை போலீஸார் கைதுசெய்தனர். இச்சம்பவத்தை அடுத்து, மாநிலம் முழுவதும் கூலி வேலை செய்துவரும் - இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன.

தாக்குதலில் ஈடுபட்டதாக இதுவரை மாநிலம் முழுவதும் சுமார் 400 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ‘புலம்பெயர்ந்த அப்பாவி கூலித் தொழிலாளிகள்மீது தாக்குதல் நடத்துவது தவறானது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.