வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (09/10/2018)

கடைசி தொடர்பு:09:07 (09/10/2018)

‘தடையை மீறி இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும்’ - முதல்முறையாக அறிவித்த அமைச்சர்

'அமெரிக்காவின் தடையை மீறி, இரானிலிருந்து இந்தியாவுக்கு பெட்ரோல் இறக்குமதி செய்யப்படும்' என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

தர்மேந்திர பிரதான்

இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக, அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதையடுத்து, இரான் மீது பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துவந்தது. மேலும், இரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள், தங்கள் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மீறினால் அந்த நாட்டின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் அமெரிக்கா - இரான் இடையே வார்த்தைப் போர் அதிகமானது. தங்களிடம் அதிக கச்சா எண்ணெய் பெறும் ஆசிய நாடுகளுக்கு, குறைந்த விலையில் எண்ணெய் வழங்குவதாக இரான் அறிவித்தது. இதனால், இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிசெய்ய அமெரிக்காவிடம் அனுமதி கோரியிருந்தது இந்தியா. 

இந்நிலையில், தற்போது அமெரிக்காவின் தடையை மீறி நவம்பர் மாதம் இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற எரிசக்தி கருத்தரங்கில் (Energy Forum) பேசிய அவர் இதைத் தெரிவித்துள்ளார். இரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இரண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை, அடுத்த மாதம் முதல் அங்கிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் எனக் கூறியுள்ளார். இது பற்றி விளக்கமளித்த அவர், “ நாங்கள் தடைக்கு உட்படுத்தப்படுவோமா இல்லையா என்பது தெரியாது. இந்தியா தனது சொந்த ஆற்றல் தேவைகளை நிறைவேற்றவேண்டிய நிலையில் உள்ளது.  நாட்டின் நலன் கருதியே எப்போதும் மத்திய அரசு செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், ‘பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் என்ற முடிவைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லாதது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 85 டாலராக உயர்ந்துள்ளது. இதை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.