வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (09/10/2018)

கடைசி தொடர்பு:13:45 (09/10/2018)

துபாயில் உயிருக்குப் போராடும் பாரம்பர்ய விதைப் பாதுகாவலர் செருவயல் ராமன்!

கேரளாவைச் சேர்ந்த பாரம்பர்ய விதைப் பாதுகாவலர் செருவயல் ராமன் துபாய் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

செருவயல் ராமன்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் செருவயல் ராமன். இந்தியாவின் பாரம்பர்ய விதைகளைப் பேணி காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். துபாயில் `வயலும் வீடும் ' என்ற பாரம்பர்ய விவசாய நிகழ்ச்சியில் பங்கேற்க செருவயல் ராமன் சென்றிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை துபாயில் அவருக்குத் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அங்குள்ள ரஷீத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 நாள்களாகத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை. தற்போது வரை ரூ. 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது. கேரள மாநில வேளாண்துறை அமைச்சர் சுனில்குமார் வேண்டுகோளை ஏற்று துபாயைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர் அவரின் மருத்துவச் செலவைக் கவனித்து வருகிறார்.

செருவயல் ராமனின் உறவினர்களை துபாய்க்கு அழைத்து வர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முயன்றனர். ஆனால், குடும்பத்தினர் யாருக்கும் பாஸ்போர்ட் இல்லையென்பதால் உடனடியாக அவர்களை துபாய்க்கு அழைத்து வர முடியவில்லை. செருவயல் ராமன் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த பாரம்பர்ய விவசாயி. இவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் 45 வகை இந்தியப் பாரம்பர்ய விதை நெல்களை வளர்த்து பயிரிட்டு பாதுகாத்து வந்தார். ஒவ்வோர் ஆண்டும் 250 விவசாயிகளைச் சந்தித்து 150 கிலோ விதைகளை அவர்களுக்கு வழங்குவது செருவயல் ராமனின் வழக்கம்.  இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க