வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (09/10/2018)

கடைசி தொடர்பு:16:24 (09/10/2018)

`நிச்சயம் அவருக்கு வலியைத் தந்திருக்கும்!' - சுயநினைவுக்குத் திரும்பினார் பாலபாஸ்கரின் மனைவி

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மறைந்த வயலின் கலைஞர் பாலபாஸ்கரின் மனைவிக்கு தற்போது சுயநினைவு திரும்பியுள்ளது. 

பாலபாஸ்கரின் மனைவி மற்றும் குழந்தை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், மலையாள இசையமைப்பாளரும் சிறந்த வயலின் கலைஞருமான பாலபாஸ்கர். இவர், கடந்த மாதம் 25-ம் தேதி, திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்குத் தன் குடும்பத்தினருடன் காரில் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுதிரும்பும்போது, பள்ளிப்புரம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கினார். இந்தச் சம்பவத்தில் அவரின் இரண்டு வயதுக் குழந்தை தேஜஸ்வினி சம்பவ இடத்திலே பலியானார். பாலபாஸ்கர் மற்றும் அவரின் மனைவி லட்சுமி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், பாலபாஸ்கர் சிகிச்சை பலனின்றி கடந்த 2 -ம் தேதி காலமானார். அவரது மறைவு மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் அவரின் மனைவி தற்போது தேறி வருகிறார். இத்தனை காலம் சுயநினைவை இழந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது. அவரின் கணவர் பாலபாஸ்கர் மற்றும் குழந்தை தேஜஸ்வினி குறித்து தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக முகநூலில் வீடியோ வெளியிட்டுள்ள பிரபல கீ போர்டு கலைஞரும் பாலபாஸ்கரின் நண்பருமான ஸ்டீபன் தேவஸ்சி, ``மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லட்சுமி தற்போது தேறி வருகிறார். சுயமாக சுவாசிக்கத் தொடங்கியுள்ளார். விரைவில் அவர் பேசத் தொடங்குவார் என்று நம்பிக்கை உள்ளது. அவரின் அம்மா, அவரிடம் பாலபாஸ்கர் மற்றும் அவரின் மகள் தேஜஸ்வினி குறித்து தெரிவித்தார். நிச்சயம் அது அவருக்கு வலியைத் தந்திருக்கும். அவர் உறுதியுடன் திரும்பி வர அனைவரும் பிரார்த்திப்போம். இந்தத் தகவல்களை எனக்கு மருத்துவர் தெரிவித்தார்” என்றார். இவர் தொடர்ந்து பாலபாஸ்கர் தொடர்பான தகவல்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.