வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (09/10/2018)

கடைசி தொடர்பு:17:27 (09/10/2018)

’தீ பிடிச்சுடுச்சு தப்பிச்சு ஓடுங்க..!’ - பலரின் உயிரைக் காப்பாற்றிய துணிச்சல் பெண் பலியான சோகம்

தீ விபத்தில் பலரை காப்பாற்றிவிட்டு ஹீரோ உயிரிழக்கும் காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால், நிஜத்தில் இப்படியொரு சம்பவம் குருகிராமில் நடந்துள்ளது. குருகிராம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலரின் உயிரைக் காப்பாற்றிய துணிச்சலான பெண், உதவி கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

தீ விபத்து

 

டெல்லி, குருகிராமில் துலிப் ஆரஞ்சு என்னும் பத்து மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 5வது தளத்தில் இண்டீரியர் டிசைனர் ஸ்வாதி (34) தன் கணவர் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார். கடந்த ஞாயிறு (7.10.2018) அன்று நள்ளிரவு 2 மணியளவில் முதல் தளத்தில் இருந்த மீட்டர் பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த பொருள்களில் தீ பிடிக்கத் தொடங்கியது.

ஸ்வாதி
 

ஐந்தாவது தளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக தூக்கத்தில் இருந்து எழுந்த ஸ்வாதி, புகை வாசம் வந்ததால் கதவை திறந்துப் பார்த்தார். தீ பரவிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்வாதி, தன் கணவரை எழுப்பி மகளை அழைத்துக்கொண்டு தரை தளத்துக்கு செல்லுமாறு கூறிவிட்டு, அதே தளத்தில் இருந்த அனைத்து வீடுகளின் கதவுகளையும் தட்டித் தீ பரவி வருவது குறித்து தகவல் சொன்னார். பின்னர் பிற தளங்களில் இருந்த வீடுகளின் கதவுகளையும் தட்டித் தப்பித்துப் போகச் சொன்னார்.

நள்ளிரவு 2.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அனைவரையும் எழுப்பிவிட்ட ஸ்வாதி பத்தாவது தளத்தில் இருந்து மொட்டை மாடிக்குச் சென்றுவிடலாம் என்று வேகமாக ஓடினார். ஆனால், மொட்டை மாடியின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தது. 3.15 மணியளவில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். கீழிருந்த தளங்களில் உள்ள மக்களைப் பத்திரமாக மீட்டத் தீயணைப்பு வீரர்கள், 3.30 மணியளவில் மொட்டை மாடிக்குச் சென்றனர். அங்கு கதவுகளுக்கு அருகே ஸ்வாதி சுயநினைவின்றி விழுந்து கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். 

தீயணைப்புத் துறை விரைந்து வந்திருந்தால் ஒருவேளை ஸ்வாதி காப்பாற்றப்பட்டிருப்பார். குடியிருப்புப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதால் ஸ்வாதியின் குடும்பத்தினராலும் அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பலரின் உயிரைக் காப்பாற்றிய  `நிஜ நாயகி’ பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். RIP Swathi! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க