வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (09/10/2018)

கடைசி தொடர்பு:18:45 (09/10/2018)

தொடரும் பாலியல் புகார்கள்! பிரபல ரியாலிட்டி ஷோவை ரத்து செய்தது ஸ்டார் நிறுவனம் #MeToo

பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகப் பேசும் #metoo என்ற பிரசாரம் உலக அளவில் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. சில நாள்களாக இந்தியாவில் இந்த # metoo பிரசாரம் வலுப்பெற்று வருகிறது.

metoo

இந்தியாவின் புகழின் உச்சியில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் பாய்ந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் ஸ்டார் நிறுவனம், தன்னுடைய ஹாட் ஸ்டார் வலைதளத்தில் ஒளிபரப்பாகும் ஆன் ஏர் ஏஐபி (ON  AIR  AIB ) என்ற நிகழ்ச்சியின், மூன்றாவது சீஸன் தயாரிப்பை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளது. ஆன் ஏர் ஏஐபி (ON  AIR  AIB ) இந்தியில் மிகவும் பிரபலமாகப் பார்க்கப்படும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோ ஆகும். இந்நிகழ்ச்சியில் வழக்கமாக ஒரு தீவிரமான பிரச்னையைக்கூட நகைச்சுவையோடு அணுகும் நகைச்சுவை வீடியோக்கள் ஒளிபரப்பப்படும். 2014-ல் இந்நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஒளிபரப்பானதால், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டார் நிறுவனம், ``கடந்த சில நாள்களாக மிகுந்த மனவேதனை அளிக்கும்படியான, பாலியல் தொந்தரவுகள் பற்றி பல செய்திகளை இந்திய பெண்கள் பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில், ஸ்டார் நிறுவனத்தின் ஹாட் ஸ்டார் வலைதளத்தில் ஒளிபரப்பாகவிருந்த ஆன் ஏர் ஏஐபி (ON  AIR  AIB ) என்ற நிகழ்ச்சிக்குத் தொடர்புடையவர்கள் மீது தொடரும் #metoo (மீ டூ) புகார்களின் அடிப்படையில் இதன் மூன்றாவது சீஸன் தயாரிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ஸ்டார் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தின் மதிப்பீடுகளை முன்னிறுத்தி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளது.
ஒரு நிறுவனமாகப் பெண்கள் பாதுகாப்பிலும் அவர்கள் வளர்ச்சியிலும் மரியாதையிலும் சிறு அளவில்கூட பாதகம் விளைவிக்கக்கூடிய எதையும் ஸ்டார் நிறுவனம் அனுமதிக்காது எனவும் பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்டரீதியாக எல்லா விதிகளுக்கு உட்பட்டுதான் இந்த நிறுவனம் செயல்படுகிறது எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதுமட்டுமன்றி, சுயமரியாதைக்காகப் போராடும் அனைத்து இந்திய பெண்களுடனும் கைகோத்து ஸ்டார் நிறுவனம் துணை நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளது.