வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:08:21 (10/10/2018)

`நீங்கள் சொன்னது சரிதான்!' - நிதின் கட்கரியை கலாய்த்த ராகுல் காந்தி

``2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்தோம்'' எனப் பேசியுள்ள மத்திய அமைச்சர் நிதின்கட்கரியின் வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, ``சரியாகச் சொன்னீர்கள்'' என்று அவரை கிண்டல் செய்துள்ளார்.

நிதின் கட்கரி

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். மராத்திய ரியாலிட்டி ஷோ ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசிய வீடியோ அது. அவருடன் பாலிவுட் நடிகர் நானா படேகர் உள்ளார். அந்த வீடியோவில் நிதின் கட்கரி, ``நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் பெரிய வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்தோம். நாங்கள் தற்போது ஆட்சியில் இருக்கிறோம்.

எங்கள் வாக்குறுதிகளை மக்கள் தேதி குறிப்பிட்டு என்ன ஆயிற்று என நினைவுபடுத்துகிறார்கள். அதை சிரித்துவிட்டு கடந்த போகிறோம்'' இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த வீடியோவைப் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ள ராகுல்,``சரியாகச் சொன்னீர்கள். தங்களுடைய நம்பிக்கையையும், கனவுகளையும் இந்த அரசாங்கம் சிதைத்துவிட்டதாக மக்களும் வருந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.