வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:08:00 (10/10/2018)

நாளை கரையைக் கடக்கும் ‘டிட்லி’ புயல்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் நாளை ஒடிசா, ஆந்திரப்பிரதேசத்தில் கரையைக் கடக்க உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘டிட்லி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், ஒடிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூரில் இருந்து 530 கி.மீ தென் கிழக்கிலும், ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திலிருந்து 480 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாகவும், இது நாளை ஒடிசா-ஆந்திரா இடையில் கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘இதனால், ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. கோர்டா, ஜகஸ்டிங்பூர், நயாகர் ஆகிய மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது’ என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அறிவியலாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார். 

மேலும், டிட்லி புயலால் மணிக்கு 125 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், வரும் 12-ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும் எனவும், அந்தந்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்றினால் மரங்கள், வீடுகள் இடிந்துவிழும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.